முதல்வர் இல்லாத நேரத்தில் துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் தேனியில் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்து கெத்து காட்டி வருகிறார்.  

தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மூன்று சட்டக்கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி தேனி மாவட்டத்தில் புதிதாக அமையவிருக்கும் அரசு சட்டக்கல்லூரியை இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.  

பின்னர், திறந்து வைத்து பேசிய ஓபிஎஸ், இங்கு சட்டக்கல்லூரி அமைய முழு முயற்சி எடுத்தது சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்தான். இதற்காக நான் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தனி மனிதருக்காக சட்டம் இல்லை. சட்டத்தின் வழியாகவே நிர்வாகம் நடைபெற வேண்டும் என கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் கூறியுள்ளார். சட்டத்தின் ஆட்சியில் எதேச்சதிகாரம், சர்வாதிகார போக்கு ஆகியவற்றுக்கு இடம் இல்லை. நீதிக்கு முன்பு அனைவரும் சமம் என்று பேசினார். 

முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்திற்கு வினாடிக்கு 300 கனஅடி வீதம் காலை முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதை துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். அணை மதகை திறந்து வைத்தார்.