தேனியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கும் பரப்புரை பொதுக்கூட்ட மேடை திடீரென சரிந்து விழுந்தது. இதில் 2 தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனையடுத்து மேடை சீரமைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பெரியகுளம் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்கள் சரவணன், மகாராஜன் ஆகியோரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக தேனி புறவழிச்சாலையில் அன்னஞ்சி விலக்கு என்ற இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்காக மேடை மற்றும் ஹெலிகாப்டர் இறங்குதளம் போன்றவை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த பணி நேற்று மாலையில் நடைபெற்று கொண்டிருந்தபோது, திடீரென மேடை சரிந்தது. மேலும் மேற்கூரைக்காக இரும்பு குழாய்கள் பொருத்தப்பட்டு இருந்த நிலையில் அவையும் சரிந்து விழுந்தன. இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மேடை சரிந்து விழுந்ததற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இதையடுத்து மேடையின் நீளம், உயரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கூடுதல் தொழிலாளர்கள் மேடை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.