மு.க.ஸ்டாலின் முதல்வரானால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக நேர்ந்து கொண்ட பெண் அதன்படியே செய்து அதிர வைத்துள்ளார்.

பரமக்குடியை சேர்ந்தவர் 32 வயதான வனிதா. மு.க ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவாரியான இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவுள்ளது. மே 7ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார் என்ற அறிவிப்பும் வந்துவிட்டது. 

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரானால் நாக்கை அறுத்து நேர்த்தி கடன் செலுத்துவதாக  பரமக்குடி தாலுகா பொதுவக்குடியைச் சேர்ந்த திமுக உறுப்பினர் கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா வேண்டியிருந்தார். அதன்படி இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்து உண்டியலில் போட்டு விடுவதாக எண்ணி தனது நாக்கை அறுத்துக் கொண்டார். கோவில் திறக்காததால் நாக்கினை வாசல்படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். பின்னர் அந்த பெண்ணை பொதுமக்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே தேர்தல் சமயங்களில் ஒரு குறிப்பிட்ட கட்சி வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அந்த கட்சி வெற்றி பெற்றால் நேர்த்தி கடன் செலுத்துகிறேன் என்று சில பெண்கள் வேண்டுவது வழக்கம் தான். அறியாமையின் பொருட்டு சிலர் இப்படி செய்கின்றனர். சவால் விடுவது சகஜம் என்றாலும் இது போன்ற காரியத்தை செய்துள்ளது தவறான முன்னுதாரணம் என்று கடும் விமர்சனங்கள் எழுகிறது.