தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவருவதையொட்டி தாமாக ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் களப்பணிகள், அதிமுகவுடனான கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து கட்சியினருடன் விரிவாக ஆலோசித்தேன். பொதுவாக உடல்நிலை சரி இல்லாமல் போவதென்பது எல்லோருக்கும் ஏற்படும் ஒரு விஷயம்தான். நடிகர் ரஜினிக்கு உடல்நிலை சரியாகி, அவர் நீண்ட காலம் வாழ வேண்டும். நல்லவர்களுக்கு அவர் குரல் கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராகமாட்டார் என்று மு.க.அழகிரி கூறியிருப்பது அவருடைய சொந்த கருத்தாகும். இந்த முறை தமிழக சட்டப்பேரவையில் தமாகா எம்எல்ஏக்களின் குரல் நிச்சயம் ஒலிக்கும். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களில் பல்வேறு நன்மைகள் தரக்கூடிய அம்சங்களும் உள்ளன. எனவே இந்த விவகாரத்தில் விவசாயிகள் விழித்துக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளின் பேச்சைக்கேட்டுக்கொண்டு விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்தை அழித்துக் கொள்ள வேண்டாம்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.