தேர்தல் முடிவுகள் வெளியானதற்கு முன்பே குச்சனூர் கோவில் கல்வெட்டில் தேனி தொகுதி எம்.பி என பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் பட்டியல் வெளியாவதற்கு முன்பே மத்திய அமைச்சரே வருக என ரவீந்திரநாத்தை வாழ்த்தி போஸ்டர் அடித்து ஊர் ஊராக ஒட்டியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், பிரதமர் அலுவலத்தில் இருந்து வந்த அழைப்பு அவரது மத்திய அமைச்சர் பதவியை உறுதி செய்திருக்கிறது. 

ஓ.பி.ஆர் விஷயத்தில் நடப்பதெல்லாம் பாஜகவுக்கும் ஓ.பி.எஸ்க்கும் உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது. தனியாளாக ஓ.பி.ரவீந்திரன் வெற்றி பெற்றது, மத்திய அமைச்சராக மகனுக்கு பதவி வாங்கிக் கொடுத்தது என பாஜகவுடன் நெருக்கம் காட்டி வரும் ஓ.பி.எஸ் அடுத்து அதிமுகவில் சக்தியாக மாறப்போகிறார் எனக்கூறுகிறார்கள் அதிமுக வட்டாரத்தினர். அதேவேளை இனி அவரது மகன் ரவீந்திரநாத் எடுத்த உடனேயே மத்திய அமைச்சராவதால், அவரது அரசியல் அடுத்து மேலும் தீவிரமாகும். ஆகையால் அதிமுகவில் முக்கிய பொறுப்பிற்கு ரவீந்திரநாத் வருவது உறுதி என்கிறார்கள். 

ஏற்கெனவே முக்கிய பொறுப்பில் தந்தை இருப்பதால் ரவீந்திரநாத்தும் அதிமுகவில் பொறுப்பிற்கு வந்தால் அதிமுகவை தங்கள் வசப்படுத்தி விடுவார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியலில் இல்லாதிருந்தபோதே வெங்கைய்யா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை தனியாக சந்தித்துப்பேசிய ரவீந்திராத் மத்திய அமைச்சராவதால் டெல்லியிலும் முக்கியத் தலைவர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்புகள் உருவாகும்.

இதுவும் ஓ.பி.எஸ் குடும்பத்திற்கு பலமே. ஆக மொத்தத்தில் அதிமுகவில் எடப்பாடியின் கை வீழ்ந்து ஓ.பி.எஸ் கை உயர்கிறது என்பதே உண்மை என்கிறார்கள்.