தமிழகம் முழுவதும் நவம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை நடைபெறவுள்ளது என எல்.முருகன் கூறியுள்ளார்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டுள்ளது. ஆனாலும், ஆளுநர் இந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்காமல்  இருந்து வருகிறார். 

இந்நிலையில், சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன்;- 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு காலதாமதின்றி ஆளுநர் அனுமதியளிக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. ஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதுமானது. 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் தர வேண்டும்.

திருமாவளவனின் கருத்தை கண்டித்து வரும் 27-ம் தேதி தமிழக பாஜக மகளிரணியினர் சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடைபெறும் என கூறியுள்ளார். அதேபோன்று தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை நடைபெறவுள்ளது. இந்த யாத்திரையில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.