கொரோனா ரத்தத்தை உடலில் ஏற்றுங்கள் என்று சவடால் பேச்சால் உலக சுகாதார நிறுவனத்திற்கே சவால்விட்ட போலி மருத்துவர் தணிகாச்சலம் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

தணிகாச்சலம் என்ற திருத்தணிகாச்சலம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவர். சென்னை, ஜெய்நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே ரத்னா சித்த மருத்துவமனையை நடத்தி வந்தார் . இவர் அண்மையில் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கை மூலம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி வந்தார்.

அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் கொரோனா சீனாவை தாக்கியவுடன் அந்நாட்டு அரசு அதிகாரிகள் தன்னை தொடர்பு கொண்டதாக கூறியிருந்தார். அத்துடன் சீனர்களுக்கு மருந்து கொடுத்து உதவி செய்ததாகவும் கூறினார். தான் கொடுத்த மருந்தால்தான் சீனா கொரோனாவை விரட்டியது என்றும் கூறி அதிர வைத்தார். அத்துடன் தணிகாச்சலம் "என்கிட்ட மருந்து இருக்குனு சொல்றேன். அப்படியிருந்தும் ஏன் இந்த அரசு என்ன கண்டுக்காம இருக்கு" என்று கோபமாக வீடியோவில் பேசினார்.

சமூக வலைதளங்களில் தணிகாச்சலத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் பரவ ஆரம்பித்தன. இதையடுத்து விசாரணையில் இறங்கிய தமிழக சுகாதாரத்துறை அவர் போலி என்பதை கண்டுபிடித்தது. இதையடுத்து கைது செய்ய வேண்டும் என சென்னை காவல்துறையிடம் புகார் அளித்தது. இதையடுத்து இரண்டு நாள்களுக்கு முன்பு சித்த வைத்தியர் தணிகாச்சலம் பொருளதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் தணிக்காசலம் குறித்து சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம். இவர் ஆரம்பத்தில் ஆண்மைக்குறைவுக்கு சிகிச்சை அளிப்பதாக விளம்பரங்கள் செய்துள்ளார். நம்பி வந்தவர்களிடம் தணிகாச்சலம் பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. அதில் நல்ல வருவாய் கிடைத்தது. அதன்பின்னர் சித்த மருத்துவர் என போலிச் சான்று இவரே தயாரரித்தாககூறப்படுகிறது.

அந்த சித்த மருத்துவர் என்று இவரே தயாரித்த போலி சான்றிதழை வைத்து சித்த மருத்துவமனை ஒன்றை தொடங்கியுள்ளார் தணிகாச்சலம் என்ற திருத்தணிகாச்சலம். அங்கு தன்னிடம் வேலைக்கு வந்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டிருக்கிறார். பின்னர் சில காலங்களில் மனைவி பிரிந்து சென்றுவிட சித்த மருத்துவராகவே தொடர்ந்து திருத்தணிகாச்சலம் செயல்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் ஆட்டிசம் குறைபாட்டுக்கு சிகிச்சை அளிப்பதாகக்கூறி திருத்தணிகாச்சலம் மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவிய நிலையில் மருந்து கண்டுபிடித்திருப்பதாக கூறிய பல வீடியோக்களை வெளியட்டிருக்கிறார் தணிகாச்சலம். அங்கு தான் வினையே ஆரம்பம் ஆனது. அனைவரும் அதை ஷேர் செய்ததால் வைரலனார். இதனால் தற்போது சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.

போலீசாரிடமே கொரோனாவுக்கு தன்னிடம் மருந்து இருப்பதாகவும், உங்களுக்கு வேண்டுமா என்றும் கேட்டிருக்கிறார். ஆனால் உண்மையில் தணிகாச்சலத்திடம் கொரோனாவுக்கான மருந்து ஏதும் இல்லையாம். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக தன் மீது கவனத்தை திசை திருப்பிய தணிகாச்சலம் உணமையில் மருந்தாக எதை சொல்லவந்தார் என்பது இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், கொரோனா ரத்தத்தை உடலில் ஏற்றுங்கள் என்று சவடால் பேச்சால் உலக சுகாதார நிறுவனத்திற்கே சவால்விட்ட போலி மருத்துவர் தணிகாச்சலம் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.