காஞ்சிபுரத்தில் பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் சினிமா இயக்குநருமான கங்கைஅமரன் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “இந்தியாவில் தேசியக் கட்சிகளின் உதவி இல்லாமல் எந்த மாநிலமும் இயங்க முடியாது. எந்த பொருள் வேண்டும் என்றாலும் மத்திய அரசாங்கத்திடம் கேட்க வேண்டிய நிலைதானே உள்ளது.
தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை என்று  அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் அறியாமல் கூறிவிட்டார். தேசிய கட்சிகளை அனுசரித்துதான் மாநில கட்சிகள் இருக்க வேண்டிய நிலை உள்ளது. ஒருவேளை கே.பி.முனுசாமி தனிக்கட்சி தொடங்குவதற்காக இப்படி பேசுகிறாரோ என்னவோ எனத் தெரியவில்லை. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் இது குறித்து எதுவும் பேசவில்லை. அவர்கள் இருவரும் சரியாகத்தான் உள்ளனர்.
தேசிய கட்சிகளின் உதவி இல்லாமல் இயங்க முடியும் என்றால் தேசிய கட்சிகளை வேண்டாம் என்று கூறியிருக்கலாம். கே.பி.முனுசாமி அவ்வாறு கூறவில்லை. இது வாழைப்பழம் காமெடிபோல உள்ளது. பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கொரோனா தடுப்பு ஊசியைப் போட்டுக் கொண்டு முன் மாதிரியாக இருப்பார்கள். பாரத ரத்னா வழங்குவதற்கான பட்டியலில் பாடகர் எஸ்.பி.பி. பெயரும் உள்ளது. என்னாலான முயற்சிகளை அதற்காக செய்து வருகிறேன்” என்று கங்கைஅமரன் தெரிவித்தார்.