வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கை நீடித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், பல்வேறு சலுகைகள், உதவிகள், கட்டுப்பாடுகளையும் அவர் விதித்துள்ளார்.

ஒடிஷா, பஞ்சாப், மகாராஷ்ட்ரா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஊரடங்குநீட்டிக்கப்படுவதாக சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களே அறிவித்துவிட்டனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிரதமர் மோடி எடுக்கும் முடிவை ஏற்போம் என்று மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும். 

தமிழ்நாடு முழுவதும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை பேக்கரிகள் இயங்கக் தடையில்லை. பார்சல்கள் மட்டுமே வழங்கப்படும். கட்டடத் தொழிலாளர்கள் உள்பட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் இரண்டாவது முறையாக நிவாரணம் வழங்கப்படும். 

ஊரடங்கு நீட்டிப்பால் அரிசி அட்டைதாரர்களுக்கு மே மாத அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக தரப்படும். பிற மாநிலங்களைச் தொழிலாளர்களுக்கு மே மாதத்துக்கான 15 கிலோ அரிசி, தலா ஒரு கிலோ துவரம்பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.