பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பதுபோல, ஜெயலலிதாவுடன் இருக்கிறார் என்பதற்காக சசிகலாவுக்கு சம்பிரதாயமாக மரியாதை கொடுத்தனர்.

சசிகலாவின் தமிழக வருகை குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூக செய்திகள் பரப்பப்பட்டு வந்தன. ஆனால் அப்படி ஏதும் நடக்காமல் அதிமுகவினர் முதல்வர் எடப்பாடியின் பின்னால் அணிவகுத்து நின்றது, சசிகலாவுக்கு மட்டுமல்லாது மன்னார்குடி கும்பலுக்கே மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27 ம் தேதி விடுதலையானார். ஓய்வுக்கு பிறகு நேற்று பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா, தமிழக அமைச்சர்கள் அளித்த புகாருக்கு பின்னரும் அதிமுக கொடி கட்டிய காரில் சென்னை நோக்கி பயணித்தார். தமிழக எல்லையில் போலீஸார் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, அவர் அதிமுகவை சேர்ந்த ஒருவரின் காருக்கு மாறினார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு உறுப்பினரே இல்லாத நிலையில், சசிகலா கட்சிக் கொடியுடன் பயணித்தது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அவர்கள் மிகுந்த ஆவேசத்துடன் கட்சித் தலைமைக்கு தகவல் தெரிவித்தனர். இருப்பினும் முதல்வர் எடப்பாடி கட்சி நிர்வாகிகளை அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டதால், மோதல்கள் தவிர்க்கப்பட்டதாக அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ’’சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சாலைகளில் திரள முடிவெடுத்தோம். ஆனால், கட்சித் தலைமை ’உங்கள் ஆவேசம் புரிகிறது. ஆனால், அவர்கள் கலவரம் செய்ய வேண்டும் என திட்டமிட்டே அப்படி செய்கிறார்கள். அதற்கு இடமளிக்கக் கூடாது. எனவே பொறுமையாக இருங்கள்’என சொன்னதால் நாங்கள் அமைதியாக இருந்தோம்.

அமைச்சர் ஜெயக்குமார் சொன்னது போன்று எல்லா கட்சியிலும் சில எட்டப்பன்கள் உண்டு. அதேபோன்று அதிமுகவிலும் சில எட்டப்பன்கள் இருந்தார்கள். அவர்கள் யார் என்பது நேற்று அம்பலமானது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் அம்மா ஜெயலலிதா ஆகியோருக்கு விசுவாசமாக இருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பில் அதிமுக கட்டிக்காக்கப்படுகிறது. இவர்கள் முற்றிலும் எடப்பாடி மற்றும் பன்னீர் தலைமைக்கு கட்டுப்பட்டு கட்சி பணியாற்றி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாது, சசிகலா சிறைக்குச் சென்ற பின்னர்தான் அதிமுகவினர் சுதந்திர காற்றையே சுவாசிக்கிறார்கள். அதற்கு முன்பு வரை அம்மாவிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி தனது மன்னார்குடி கும்பலுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே கட்சிப் பதவிகள் கிடைக்குமாறு பார்த்துக் கொண்டவர்தான் சசிகலா. தற்போது அந்தக் கும்பல் கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுவிட்டதால், முன்னைக் காட்டிலும் முனைப்புடன் மக்கள் தொண்டாற்றி வருகிறது அதிமுக.

ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில், வீட்டில் தனக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கவனித்துக் கொள்வதற்காகத்தான் சசிகலாவை தன்னுடன் வைத்திருந்தார். அந்த வகையில், ஜெயலலிதாவை சந்திக்க வரும் கட்சி பிரமுகர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சசிகலாவை முதலில் சந்திப்பது உண்டு. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பதுபோல, ஜெயலலிதாவுடன் இருக்கிறார் என்பதற்காக சசிகலாவுக்கு சம்பிரதாயமாக மரியாதை கொடுத்தனர்.

ஆனால், இதையே சசிகலாவும், மன்னார்குடி கும்பலும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, கோடி கோடியாய் கொள்ளையடித்தனர். செய்த தவறுக்காக சிறைக்குச் சென்று திரும்பிய பின்னரும், அவர்கள் ஆட்களை அழைத்து வந்து போடும் நாடகங்களை தமிழக மக்கள் முக சுளிப்புடன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். சமீபத்திய தேர்தல்களில் தினகரன் கட்சிக்கு என்ன கதி ஏற்பட்டது என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான். சசிகலா வருகையால் ஒன்றும் மாறப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், சசிகலா பெயரைச் சொல்லிக்கொண்டு மன்னார்குடி கும்பல் அரசியலில் அடியெடுத்து வைத்தால், அவர்களை மக்கள் ஓட ஓட விரட்டப் போவது உறுதி’’ என அவர் தெரிவித்தார்.