மே.வங்கத்தில் கொரோனா பாதிப்பு நிலைமை மோசமாக இருக்கிறது. மருத்துவமனையில் போதுமான பரிசோதனைக் கட்டமைப்பு வசதிகள் இல்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

மாநிலத்தின் நிலைமையைக் கண்டறிய அனுப்பப்பட்ட மத்தியக் குழுவுக்கும் மாநில அரசு ஒத்துழைக்கவில்லை. அவர்கள் வந்தபோது திடீரென கொல்கத்தாவிலும், வடக்கு வங்கத்திலும் பரிசோதனையை அதிகப்படுத்தினர்’’என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. 
அங்கு 2,461 பேர் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 225 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா அதிக பாதிப்புள்ள மாநிலங்களில் 4வது இடத்தில் மேற்கு வங்காளம் உள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில் செவிலியர்களாக பிற மாநிலங்களை சேர்ந்தவர்களே பணியாற்றி வருகின்றனர். இவர்களில் மணிப்பூரை சேர்ந்த செவிலியர்கள் 2 ஆயிரம் பேர் வரை பணிபுரிகின்றனர். இதனை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த செவிலியர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் பின்னடைவாக, செவிலியர்கள் பலர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.

மணிப்பூரை சேர்ந்த 185 செவிலியர்கள் மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த சூழலில், ஒரே நாளில் அவர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டு சொந்து ஊருக்கு சென்று விட்டனர்.

இதேபோன்று பிற வடகிழக்கு மாநில செவிலியர்களும் மற்றும் ஒடிசாவை சேர்ந்த செவிலியர்களும் ராஜினாமா செய்ய கூடும் என கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பு நெருக்கடியில் மேற்கு வங்க அரசும் மக்களும் தவித்து வரும் நிலையில், செவிலியர்களின் ராஜினாமா செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கொத்துக் கொத்தாக செவிலியர்கள் ராஜினாமா செய்வதால் கொரோனா சிகிச்சை அளிப்பதில் பெரும் பின்னடைவு ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது. இந்த சிக்கலில் இருந்து மேற்கு வங்க அரசு எப்படி மீண்டு சமாளிக்கப்போகிறது என்கிற கேள்வி எழுந்துள்ளது.