the reason for fire accident in meenakshi amman temple

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு கடைக்காரர் ஒருவர் திருஷ்டி சுற்றியது தான் காரணம் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் அருகே ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வளையல் உள்ளிட்ட பெண்களின் அலங்கார பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

கலைநயம்மிக்க தூண்கள், வண்ணப்பூச்சுகள், வீரவசந்தராயர் மண்டபம் போன்றவை முற்றிலும் சேதமைடைந்தன. இந்த தீ விபத்து பக்தர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ பிடித்த சம்பவத்தில் கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் சம்பவம் நடந்த இடத்தில் கடை நடத்தி வரும் முருகபாண்டி என்பவர் கடையை பூட்டிவிட்டு திருஷ்டி சுற்றிய காட்சிகள் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த கடையில் பணிபுரிந்த ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 இந்த தீ விபத்திற்கு திருஷ்டி சுற்றியது தான் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அனைத்து கடைக்காரர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளார்.