தமிழகத்தின் உண்மையான சூப்பர் ஸ்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். நடிகர்களை சினிமாவில் நினைப்பது போன்று உண்மையாகவும் மக்கள் நினைப்பார்கள் என்று கூற முடியாது என்றார்.

தமிழக அரசியலில், சினிமா பிரபலங்கள் நுழைந்துள்ளனர். நடிகர் கமல் ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியினை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த 20 வருடங்களாக அரசியலில் நுழைவது குறித்து பேசி வந்த நடிகர் ரஜினிகாந்த், கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி அன்று தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார். அது தொடர்பான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ரஜினி, கமலுக்கு எதிராக ஆதரவு கருத்துகளும் எதிர் கருத்துக்களும் கூறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், உள்ளாட்சி துறை அமைச்ச்ர எஸ்.பி.வேலுமணி, தமிழகத்தின் உண்மையான சூப்பர் ஸ்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்று கூறியுள்ளார்.

சென்னை, தியாகராய நகரில் இன்று எஸ்.பி.வேலுமணி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோரை அகில இந்திய சூப்பர் ஸ்டார் என மக்கள் சொல்கின்றனர்.

ஆனால், நடிகர்களை சினிமாவில் நினைப்பது போன்று, உண்மையாகவும் மக்கள் அவ்வாறே நினைப்பார்கள் என்று கூற முடியாது என்றார்.

மேலும் பேசிய அவர், தமிழகத்தின் உண்மையான சூப்பர் ஸ்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான். அதனை யாரும் மறுக்க முடியாது என்று கூறினார். ஏனென்றால், முதலமைச்சர் தினந்தோறும் மக்களைச் சந்திக்கிறார். தினமும் கோட்டைக்கு செல்கிறார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.