நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மாநிலங்களவைக்கு இன்று சென்ற எம்.பி.க்கள் அனைவருக்கும் சிறிய ஆச்சர்யம் காத்திருந்தது. 
ஏனென்றால், மாநிலங்களவை தலைவருக்கு அருகே நிற்கும் மார்ஷல்கள் வழக்கமாக இந்தியப் பாரம்பரிய குர்தா உடையிலும், தலையில் தலைப்பாகையும் கட்டி இருப்பார்கள். இதுதான் நீண்டகாலமாக அவர்களின் சீருடையாக இருந்து வந்தது.


ஆனால், இன்று காலை அவர்களின் சீருடை மாற்றப்பட்டு, ராணுவப் பச்சை(ஆலிவ் கிரீன்) ராணுவ உடை போன்ற தோற்றத்தில் சீருடையும், தலையில் தொப்பியும் வழங்கப்பட்டு சீருடை முற்றிலும் மாற்றப்பட்டு இருந்தது.


மாநிலங்களவை இந்த ஆண்டுடன் 250-வது கூட்டத் தொடரை நிறைவு செய்கிறது.இதையொட்டி மார்ஷல்கள் சீருடை மாற்றப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1952-ம் ஆண்டு 245 உறுப்பினர்களுடன் தொடங்கிய மாநிலங்களவை வரும் 26-ம் தேதியுடன் 70 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. கூட்டுக்கூட்டமும் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


1952ம் ஆண்டு முதல் இதுவரை 249 மாநிலங்களவை அமர்வு நடைபெற்றுள்ளது. 249 அமர்வுகளில் 3,817 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேசமயம் பல்வேறு கால கட்டங்களில் மாநிலங்களவை கலைக்கப்பட்டதால் 60 மசோதாக்கள் காலாவதியாக விட்டன. முதல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற 1952ம் ஆண்டு முதல் 3,818 நாடாளுமன்ற சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.