ஜெயலலிதாவின் போயஸ்கார்டன், ஐதராபாத் திராட்சை தோட்டம் உள்ளிட்ட 4 சொத்துக்களை முடக்கி வைத்துள்ளதாக வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. வருமான வரி பாக்கியை செலுத்தி விட்டால் நினைவு இல்லம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை என வருமான வரித்துறை பதில் அளித்துள்ளது. இந்த நிலையில் அந்த வருமான வரி பாக்கியை யார் செலுத்தப்போவது என்கிற கேள்வி எழுந்துள்ளது.  

சென்னை போயஸ் தோட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு செலவில் ஜெயலலிதா நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்க கோரி டிராபிக் ராமசாமி மற்றும் வழக்கறிஞர் எம்எல்.ரவி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்றுவதில் வருமான வரித்துறைக்கு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஜெயலலிதாவின் இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற வருமான வரித் துறையின் பதிலை உயர்நீதிமன்றம் கேட்டது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை 2007-ஆம் ஆண்டே முடக்கி வைத்துள்ளோம் என வருமான வரித் துறை தனது பதில் மனுவில் இன்று பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது. வருமான வரித் துறை தனது பதில் மனுவில் கூறுகையில் ரூ.10.13 கோடி சொத்து வரியும், ரூ. 6.62 கோடி வருமான வரியும் நிலுவையில் உள்ளதால் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம், ஐதராபாத்தில் உள்ள வீடு, சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள கடை உள்பட 4 சொத்துகள் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டுள்ளது.

இந்த வரி பாக்கியை செலுத்திவிட்டால் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்ற ஆட்சேபம் இல்லை என வருமான வரித் துறை தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது. வருமான வரி பாக்கியை யார் செலுத்தப் போகிறார்கள்? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் இது தொடர்பாக 2 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்கவும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் 16 கோடியே 75 லட்சம் பாக்கித் தொகையை யார் செலுத்த முன்வரப்போகிறார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அம்மாவின் உண்மை விசுவாசிகள் நாங்களே என எடப்பாடி பழனிசாமி தரப்பும் டி.டி.வி.தினகரன் தரப்பும் மார்தட்டி வருகின்றனர். ஆகையால் இந்தப் பெரும் தொகையை இந்த இருதரப்பை தவிர வேறு யாரும் செலுத்த இயலாது. இந்தத் தொகையை வருமானவரித்துறையில் செலுத்த வேண்டும் என்றால் முறையாக கணக்கு காட்டப்பட்ட தொதையில் இருந்தே  வரி பாக்கியை செலுத்த வேண்டும். அரசு சார்பில் இருந்தும் இந்தப்பணத்தை செலுத்த முடியாது.

தனிப்பட்ட முறையில் முறையாக சம்பாதித்த பணத்தை மட்டுமே செலுத்த வேண்டிய கட்டாய நிலை. இந்த தொகையை செலுத்தி போயஸ் கார்டனை மீட்க எடப்பாடி பழனிசாமி தரப்போ, அல்லது டி.டி.வி.தினகரன் தரப்போ முன் வருமா எனத் தெரியவில்லை. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இந்தத் தொகையை செலுத்த முன் வரமாட்டார். அவர் ஜெயலலிதாவுக்கு நினைவு இல்லம் அமைக்கக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். காரணம் அவரத்யு முதல் இலக்கே போயஸ் கார்டனை தனக்கு சொந்தமாக்கி கொள்ளவேண்டும் என்பது தான்... ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் என மார்தட்டிக் கொண்டவர்கள் யாராவது இருந்தால் போயஸ் கார்டனை மீட்டு ஜெயலலிதா நினைவு இல்லம் உருவாக்க முன் வரலாம்...