இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, சாதி, மதம், மொழி, இன பேதங்கள் இன்றி அனைவரும் சமம் என்ற கருத்திற்கு எதிராகத் தொடர்ந்து ஒரு தரப்பு இயங்கி வருகிறது. அவர்களின் சதிக்கு சில கல்வி நிறுவனங்களும் பலியாகி வருகின்றன.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் பண்பாட்டையும், அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பதற்கு ஒன்றுகூட வேண்டிய நேரமிது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஹிஜாப் அணிந்துவந்தால், காவித் துண்டு அணிந்து வருவோம் என்று கூறி பல பகுதிகளிம் இந்துத்துவ மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஹிஜாப் அணிய பல கல்லூரி நிர்வாகங்கள் தடை விதித்தன். இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையானது. இந்நிலையில் கல்லூரிக்கு புர்கா அணிந்து வந்த இஸ்லாமிய பெண்ணிடம் ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று கோஷம் எழுப்பியவர்களிடம், ‘அல்லாஹு அக்பர்’ என்று அந்த மாணவி பதிலுக்கு கோஷம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

பல்வேறு அரசியல் கட்சியினரும் மாணவியின் தைரியத்தைப் பாராட்டி பதிவிட்டு வருவதோடு, அரசியல் தலைவர்கள் சமூகத்தில் இந்தியர்களைச் சமம் எனக் கருதும் போக்கு குறைந்திருப்பதாகவும், தனியாக இருந்த மாணவியை கும்பலாக இருந்த ஆண் மாணவர்கள் எதிர்கொண்ட விதம் முதலானவற்றை விமர்சித்தும் வருகின்றனர்.

இதுதொடர்பாக திமுக எம்.பி.கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, சாதி, மதம், மொழி, இன பேதங்கள் இன்றி அனைவரும் சமம் என்ற கருத்திற்கு எதிராகத் தொடர்ந்து ஒரு தரப்பு இயங்கி வருகிறது. அவர்களின் சதிக்கு சில கல்வி நிறுவனங்களும் பலியாகி வருகின்றன.
மத நல்லிணக்கம் வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் பண்பாட்டையும், அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பதற்கு ஒன்றுகூட வேண்டிய நேரமிது. பெண்கள் என்ன ஆடை உடுத்துகிறார்கள் என்பதில்லை இந்த சமூகத்தின் பிரச்சனை என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
