மன்னர் ஆட்சி காலத்தில், அரியணையில் யார் அமர்ந்தாலும், மக்கள் அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். அதனால் தான், சகுனி போன்றவர்கள் கூட சாதித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், ஜனநாயக ஆட்சியில், மக்கள் செல்வாக்கை பெறாமல் அரியணையில் அமர்ந்தால், அந்த அதிகாரம் நீடித்து நிலைக்காது என்பதுதான் சசிகலா வரலாறு உணர்த்தும் உண்மை.

ஜனநாயக நடை முறையில், மக்கள் ஆதரவை பெறுவதே முதல் வேலை. அந்த ஆதரவை பெறாமல், அதிகாரத்தை மட்டும் கைப்பற்றிக் கொள்ள துடிப்பது எல்லா காலங்களிலும் பலன் தராது.

அதிமுக என்ற தொண்டர்கள் நிறைந்த ஒரு கட்சிக்கு பொது செயலாளராகவும், முதல்வராகவும் இருந்தவர் ஜெயலலிதா. அவரது நிழலாகவே இருந்து ஆட்சியிலும், அதிகாரத்திலும் கோலோச்சியவர் சசிகலா.

அந்த செல்வாக்கை பயன்படுத்தி, மக்கள் மத்தியில் ஒரு நல்ல இமேஜை உருவாக்கி இருந்தால், நிச்சயம் சசிகலாவும் தற்போது ஒரு மக்கள் தலைவராக உருவெடுத்து இருப்பார்.

ஆனால், அதிகாரம் கைமீறி போய்விடக்கூடாது, என்பதற்காக அவர்  மேற்கொண்ட பகீரத முயற்சிகளில், ஒரு பத்து சதவிகிதம், மக்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள பயன்படுத்தாமல் விட்டதுதான் இன்றைய சரிவுக்கு முக்கிய காரணம்.

கட்சியிலும், ஆட்சி அதிகாரத்திலும் தமக்கென ஒரு வலுவான நெட் ஒர்க்கை உருவாக்கிய சசிகலா, அதற்காக, மூத்த, முக்கிய நிர்வாகிகள் பலரையும் தயவு தாட்சண்யம் இன்றி தடம் தெரியாமல் அழித்தார்.

மறுபக்கம், தமக்கு பாதுகாப்பு என்று கருதி, குடும்ப உறவுகளுக்கும், சமூக உறவுகளுக்கும்  அதிக முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் தாறுமாறான ஆட்டத்தை கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டார்.

அதன் காரணமாகவே, அதிமுகவினர் மட்டுமன்றி பொது மக்களும் சசிகலாவை ஒரு வில்லியாகவே பார்க்க ஆரம்பித்தனர்.

திமுகவின் மிகப்பெரும் தலைவராக அண்ணா இருந்த போதே, தமக்கென்று ஒரு தனிப்பட்ட ஆதரவாளர் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தவர் கருணாநிதி. 

ஆனால், அவர் மக்கள் குரலை ஓங்கி ஒலிக்கும் தலைவராகவும் தன்னை வடிவமைத்துக் கொண்டாரே ஒழிய, அதிகாரத்தை மட்டுமே குறி வைத்து  காய்களை நகர்த்தவில்லை.

அதன் காரணமாகவே, அண்ணா மறைவுக்கு பின்னர், எம்.ஜி.ஆர் போன்ற மக்கள் செல்வாக்கு பெற்றவர்களின் ஆதரவோடு முதல்வர் ஆனார். இன்று வரை அவர்தான் தலைவராக இருக்கிறார்.

ஜனநாயகத்தின் அடிப்படையான மக்கள் செல்வாக்கை புறம் தள்ளிவிட்டு, வெறும் அதிகாரத்தை மட்டுமே குறிவைத்த தவறான வியூகமே, இன்று சசிகலாவை மக்கள் மன்றம் நிராகரிக்க காரணமாக ஆகிவிட்டது.

சசிகலா குடும்பத்தின் அரசியல் முடிவுரைக்கு பின்னால், பாஜகவின் கை இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்தாலும், லஞ்சம், ஊழல், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு என அவர்களுக்கான வலையை, அவர்களாகத்தானே, விரித்துக் கொண்டனர். 

அதை பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாமே ஒழிய, ஆதாரம் இல்லாமல் யாரையும் எதிலும் சிக்க வைக்க முடியுமா? என்பதுதான் அரசியல் நோக்கர்கள் எழுப்பும் கேள்வி.

எனவே, மக்கள் செல்வாக்கை பெறாமல், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால், அது எந்நேரமும் சீட்டு கட்டு போல் சரிந்து விடும் என்பதே, சசிகலா மூலம் அரசியல் வாதிகள் உணரவேண்டிய பாடம்.