வேட்பாளர்களை அமித் ஷாவே நேரடியாக தேர்வு செய்வார். யாருடைய சிபாரிசும் இங்கே செல்லுபடி ஆகாது. இந்த முடிவுக்கு பின்னால் ஒரு பெரிய அரசியல் வியூகம் இருக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் தேர்வு பணிகளை பாஜக மேலிடம் மிக தீவிரமாக முடக்கி விட்டுள்ளது. இதற்காக சமீபத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மத்திய இணை அமைச்சர்கள் அர்ஜுன் ரா மேகவால் மற்றும் முரளிதர் மஹோல் ஆகியோர் சென்னைக்கு ஒரு ரகசிய விசிட் அடித்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு தான் தமிழக பாஜகவுக்குள் ஒருவித நடுக்கம் தொடங்கி இருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு மிகத் தெளிவான முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுதான் 80 20 பார்முலா. அதாவது வரப்போகும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 80 சதவீதம் பேர் மாவட்ட அளவிலான நிர்வாகிகளாக தான் இருக்க வேண்டும். மாநில அளவிலான பெரிய தலைவர்களுக்கு வெறும் 20% இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும்.

இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் இந்த வேட்பாளர்களை அமித் ஷாவே நேரடியாக தேர்வு செய்வார். யாருடைய சிபாரிசும் இங்கே செல்லுபடி ஆகாது. இந்த முடிவுக்கு பின்னால் ஒரு பெரிய அரசியல் வியூகம் இருக்கிறது நீண்ட காலமாக கட்சிக்காக அடிமட்டத்தில் உழைத்தவர்கள் ஓட்டு சாவடி மட்டம் வரை செல்வாக்கு உள்ளவர்கள், மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க பாஜக முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள், முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் கவர்னர்களுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைப்பது மிக கடினம் என்று சொல்லப்படுகிறது.

குறிப்பாக குற்றப் பின்னணி உள்ளவர்கள் வேட்பாளர் பட்டியலிலேயே இடம்பெற மாட்டார்கள் என்பதில் டெல்லி தலைமை மிகக் கறாராக இருக்கிறது. கூட்டணி விவகாரத்தை பொருத்தவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பியூஸ் கோயில் குழுவினர் சந்தித்து பேசி உள்ளனர். இந்த சந்திப்பின்போது மத்திய உளவுத்துறை, ஒரு தனியார் நிறுவனம் ஆய்வு செய்து தயார் செய்த 50 முக்கிய தொகுதிகளின் பட்டியலை அதிமுகவிடம் பாஜக வழங்கி உள்ளது. தாங்கள் பலமாக இருக்கும் இந்த 50 தொகுதிகளில் குறைந்தது 40 தொகுதிகளையாவது தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் அதிமுக தரப்பு 30 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க தயாராக இருப்பதாக தெரிகிறது.

இந்த திடீர் மாற்றங்களால் தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகிகள் பலர் கலக்கத்தில் உள்ளனர். இத்தனை வருஷம் கட்சிக்காக உழைத்தும் நமக்கு சீட்டு இல்லையா? என்ற கேள்வி கமலாலயத்தின் சுவர்களுக்குள் எதிரொலிக்கிறது. அதே சமயம் மாவட்ட அளவில் பணியாற்றும் இரண்டாம் கட்ட தலைவர்கள் இந்த முடிவை உற்சாகத்தோடு வரவேற்கிறார்கள். அமித் ஷாவின் இந்த நேரடி தலையீடு தமிழக அரசியலில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும்? மாநில நிர்வாகிகளின் அதிருப்தி தேர்தலை பாதிக்குமா? அல்லது புதிய முகங்கள் பாஜகவுக்கு வெற்றியை தேடி தருவார்களா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.