தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார், அப்போது உள்துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார் என தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிவர் புயல் தாக்கியது, இதில் கடலூர்,  நாகப்பட்டினம்  உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேபோல் பாண்டிச்சேரியும் இந்த புயலால் கடும் பாதிப்பை சந்தித்தது. அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர் போன்ற மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னையில் மட்டும் 67 இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. அப்போது தொலைபேசி வாயிலாக தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புயல் பாதிப்புகளில் இருந்து மீள தேவையான  அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக கூறியிருந்தார். 

அதேபோல பாதிப்புகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது எனவும், தேசிய மீட்பு படையினர் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீண்டும் புயல் உருவாகி உள்ளது. அதற்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புரவி புயல் நேற்று இரவு இலங்கையில் திரிகோண மலைக்கு வடக்கே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படியே நேற்று இரவு திருகோணமலை அருகே புயல் கரையை கடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பாம்பனுக்கு 90 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் புரவி புயல் இன்று பாம்புக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இரவு இலங்கையில் புரவி புயல் கரையை கடந்துள்ள நிலையில் பாம்பன் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. முன்கூட்டியே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள சுமார் 209 நிவாரண மையங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புரவி புயல் குறித்து விசாரித்ததாக என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது, அதில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இன்று காலை மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்பொழுது மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர் அவர்கள் புரவி புயல் குறித்தும் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தார். அப்பொழுது மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார். என அதில் கூறப்பட்டுள்ளது.