Asianet News Tamil

Exclusive story: வீரமங்கை வேலுநாச்சியார் கடந்து வந்த பாதை... பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் வரலாறு!!

பெண்கள், ஆண்களுக்கு நிகராக சாதிக்கமுடியும் என்பதை நிருபித்துக்கொண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் கல்வி, மருத்துவம், விஞ்ஞானம், அரசுத்துறையென அனைத்திலும் பெண்கள் காலடி படாத இடமே இல்லை என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளோம். என்னதான் இந்த அளவிற்கு பெண்சுதந்திரம் இருந்தாலும் நிறைய படித்த, கைநிறைய சாம்பாதிக்கும் பெண்கள் ஆண்களின் அடிமைத்தனத்திற்கு மண்டியிட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு விடுதலை என்பது கிடையாது

The path that Veeramangai Velunachayar crossed ... the history of giving confidence to women !!
Author
Sivaganga, First Published Mar 8, 2020, 10:12 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

T.Balamurukan

பெண்கள், ஆண்களுக்கு நிகராக சாதிக்கமுடியும் என்பதை நிருபித்துக்கொண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் கல்வி, மருத்துவம், விஞ்ஞானம், அரசுத்துறையென அனைத்திலும் பெண்கள் காலடி படாத இடமே இல்லை என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளோம். என்னதான் இந்த அளவிற்கு பெண்சுதந்திரம் இருந்தாலும் நிறைய படித்த, கைநிறைய சாம்பாதிக்கும் பெண்கள் ஆண்களின் அடிமைத்தனத்திற்கு மண்டியிட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு விடுதலை என்பது கிடையாது என்பதை இந்த தருணத்தில் நாம் நினைவுபடுத்திப்பார்க்க வேண்டும்.
குடும்பம், குழந்தைகள், குடும்ப கவுரவம் என அந்த கோட்டைக்குள் பெண்கள் சிக்கிக்கொண்டு தனக்குபிறந்த வீட்டில் கிடைத்த சுதந்திரம் கிடைக்காமல் வாழப்போன வீட்டில் ஏடிஎம் மிசினாக மட்டுமே இருக்கும் பெண்கள் உலகில் ஏராளம் என்பதை மறுக்கவே முடியாது. வீரமங்கை வேலுநாச்சியார் பெண்களுக்கு எடுத்துக்காட்டு எனவே அவர் கடந்து வந்த கரடு முரடான பாதைகளை மகளீர் தின நாளான இன்று தொகுத்து வழங்கியிருக்கிறோம்.


 வீரமங்கை ஜான்சிராணிக்கு முன்பே 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயேர்களுக்கு எதிராக நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண் வீரமங்கை வேலுநாச்சியார். தமிழகத்தின் கடைக்கோடி மூலை சிவகங்கை சீமையில் இருந்து வெள்ளையர்களை விரட்டியடித்தாள் என்கிற பெருமை வரலாறு வீரமங்கை வேலுநாச்சியருக்கு மட்டுமே உண்டு.
இராமநாதபுரம் டூ சிவகங்கை:காலம்(1749-62)
   ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதிக்கும் தாய் முத்தாத்தாள் நாச்சியாருக்கும் பிறந்த ஒரே மகள் வேலுநாச்சியார். அரண்மனையில் ஆண் வாரிசு இல்லாத குறை இல்லாமல் இருக்கவே வீர விளையாட்டுகளான சிலம்பம், குதிரை ஏற்றம், வாள்வீச்சு, வில் வித்தை முதலான வீரக்கலைகளில் பயிற்சி பெற்றார்.. போர் பயிற்சிகளுடன் பிரென்சு, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றார். கல்வி நிர்வாகத்திறன், போர் பயிற்சி என அனைத்திலும் கெட்டிக்காரியகாக திகழ்ந்தார். இவ்வளவு திறமையை பெற்ற வேலுநாச்சியார்   தன் இளமை பருவத்திலேயே சிவகங்கையின் மன்னரான முத்துவடுகநாத பெரியஉடையத் தேவரை  மணந்து சிவகங்கை சீமைக்கு ராணியானார்.  முத்துவடுக நாததேவருக்கு பெரிதும் துணை நின்றவர்கள் பிரதானி தாண்டவராய பிள்ளை, ராணி வேலுநாச்சியார் தளபதிகளான மருதுசகோதரர்கள்  இருந்தனர்.  நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்த வேலுநாச்சியாருக்கு அழகான பெண் குழந்தை  பிறந்தது. அந்த குழந்தைக்கு  'வெள்ளச்சி' என பெயர்சூட்டி சீமையே கொண்டாடியது. 


வேலுநாச்சியாரின் சோகம்:
இளம் வயதிலேயே திருமணமான வேலுநாச்சியார் கொஞ்ச காலத்திலேயே சோகத்தையும், நாட்டையும் சுமக்க வேண்டிய காலத்திற்கு ஆளானார். ஆற்காடு நவாப்பிற்கு கப்பம் கட்ட மறுத்ததால் ஆங்கிலேயப்படை நவாப் படையும் இணைந்து முத்துவடுகநாதர் மீது படையெடுத்தது. காளையார் கோவில் போரில் முத்துவடுகநாதரும் இவரது இளையராணியான கௌரி நாச்சியாரும் வீரமரணமடைந்தார்கள். இந்த செய்தியை கேட்டதும் வேலுநாச்சியார் இடிந்து போய் இருந்தார். என்னதான் வீரமங்கையாக இருந்தாலும் கணவன் மரணம் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அரண்மனையில் இருக்கும் தளபதிகளான பிரதானி தாண்டவராயபிள்ளை, மருதுசகோதரர்கள் எல்லாம் முதலில் தங்களை தேற்றிக்கொண்டு பிறகு வேலுநாச்சியாருக்கு நம்பிக்கை, வாக்குறுதிகளை கொடுத்தார்கள். எப்படியாவது இழந்த சிவகங்கை சீமையை மீட்டே தீருவோம் என்பது தான் இவர்களின் ஸ்லோகமாக அப்போது இருந்தது.
நாட்டையும் நாட்டுமக்களையும் காப்பதற்காக தான் கற்ற கலைகள் அனைத்தையும் பயன்படுத்தினார் வேலுநாச்சியார். சிவகங்கை அருகே உள்ள கொல்லங்குடியில் தங்கியிருந்த வேலுநாச்சியார் வெள்ளச்சி நாச்சியார் முதலானோர் தண்டவராயன்பிள்ளை மருதுசகோதரர்கள் துணையுடன் திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாச்சி பாளையத்திற்கு தப்பிச் சென்றார். ஆற்காடு நவாப்பின் பிடியில் இருந்து இழந்த பகுதிகளான இராமநாதபுரம் சிவகங்கை ஆகிய பகுதிகளை மீட்கவும் திண்டுக்கலில் தங்கியிருந்த மைசூர்; மன்னர் ஹைதர்அலியிடம் படை உதவி கேட்டார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை விருப்பாச்சிக்கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறிமாறி முகமிட்டு வாழ்ந்து வந்தார். இதற்கிடையில்  தமது எட்டு வயது மகளையும்  பாதுகாக்க வேண்டியநிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசி  விடுதலைப்படை ஒன்று உருவாக்கப்பட்டது.

ஹைதர்அலி வேலுநாச்சியார் சந்திப்பு:

உருதுமொழி சரளமாக பேச தெரிந்தவர் வேலுநாச்சியார்.ஆகையால் தான் விருப்பாச்சி பாளையத்தில் தங்கியிருந்த வேலுநாச்சியார் அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார் மருதுசகோதரர்கள் ஆகியோர் திண்டுக்கல் கோட்டையில் தங்கியிருந்த ஹைதர்அலியை சந்தித்து ஆங்கிலேயர்களின் எதிர்ப்பு குறித்து உருதுமொழியில் விளக்கி பேசினார். இவரின் திறமைகளை கண்டு வியந்து நின்ற ஹைதர்அலி போர் புரிவதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்து மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்தார்.அதன் பிறகு  தளபதிகளில் ஒருவரான தாண்டவராயன்பிள்ளை மூலமாக கடிதம் ஒன்றை எழுதினார் வேலுநாச்சியார். அந்த கடிதத்தில் 5000 ஆயிரம் குதிரைகளையும் 5000 குதிரை வீரர்களையும் அனுப்பி வைத்தால் அவர்களுடன் சேர்ந்து போரிட்டு இரண்டு சமஸ்தானங்களையும் ஆற்காடு நவாப்பிடமிருந்து மீட்க முடியும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதே போல் வேலுநாச்சியாரின் பல்மொழி புலமை திறமைகளைக் கண்டு ஹைதர்அலி வேலுநாச்சியார் கேட்ட படைகளை அனுப்பி வைத்தார்.இதற்கிடையில் உதவிகேட்ட தாண்டவராயன்பிள்ளை உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போனார்.அதன்பின் வேலுநாச்சியார் நேரடியாக அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டு அப்பகுதி நாட்டார்களிடம் ஓலை தொடர்பை வலுப்படுத்திக்கொண்டார். அதன் பின் மருதுசகோதரர்களையும் இந்த அரசியல் பணியில் ஈடுபடுத்திக்கொண்டார் வேலுநாச்சியார். 

 

கொரில்லா தாக்குதல் போர் முறை:

ஆங்கிலேயர்களையும் ஆற்காடுநவாப் ஆகிய இருவரையும் ஒழித்துக்கட்ட ஹைதர்அலி முடிவு செய்து அதற்கான திட்டங்களையும் வகுத்தார். சிவகங்கை சீமையை ஆற்காடு நவாப்பிடமிருந்து மீட்பதற்காக நீங்கள் கேட்ட படைகளை திண்டுக்கல் கோட்டை வந்து பெற்றுக் கொள்ளுமாறு வேலுநாச்சியாருக்கு கடிதம் அனுப்பினார் ஹைதர்அலி. அதன்படி வேலுநாச்சியார் அந்த படைகளோடு சிவகங்கை நோக்கி புறப்பட்டார்.  படைகளோடு திரும்பி வரும் வழியில் ஆற்காடுநவாப் படைகள் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியது.அதையெல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு வரும் வழியில் மதுரை கோச்சடை என்னுமிடத்தில் ஆங்கிலேயர் ஆற்காடுநவாப் படைகள் ஒன்று சேர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். அப்போது இவர்கள் 'கொரில்லா போர்முறை' பயன்படுத்தி அந்த படைகளை ஓட ஓட விரட்டியத்தார்கள். தனது படைகளை சிவகங்கை, திருப்பத்தூர்,  காளையார் கோவில் என மூன்று பரிவுகளாக பிரித்து கொரில்லா தாக்குதல் ஹைதர் அலி படைகளின் உதவியோடு நடத்தி ஆற்காடு நவாப்படைகளை விரட்டியடித்து. இழந்த ராஜ்யங்களை மீட்டார் வேலுநாச்சியார்.

வெட்டுடையாள் காளி எப்படி வந்தது:

காளையார் கோவில் பகுதியை மீட்க ஆங்கிலேயருடன் வேலுநாச்சியார் படைகள் மறைந்திருப்பது ஆங்கிலேய படை தளபதிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே காட்டுக்குள் ஆங்கிலேய படைகளோடு தளபதிகள் சுற்றி வரும் வழியில் உடையாள் என்கிற பெண்ணிடம் விசாரிக்கிறார்கள் ஆங்கிலேயர்கள். இவளுக்கு தெரிந்தாலும் காட்டிக்கொடுக்க மறுக்கிறாள்.கோபமுற்ற ஆங்கிலேயர்கள் உடையாளை வெட்டி வீசிவிடுகிறார்கள். இந்த தகவல் வேலுநாச்சியாருக்கு தெரிந்ததும் தமக்காக உயிரை விட்ட அந்த பெண்ணிற்காக 'வீரக்கல்' ஒன்றை நட்டு தமது திருமாங்கல்யத்தை முதல்காணிக்கையாக செலுத்தி அஞ்சலி செலுத்தினார். அந்த வழிபாடு அப்படியே தொடர்ந்து இன்றைக்கு கொல்லங்குடி காளிகோயிலாக இன்றும் அப்பகுதி மக்களுக்கு நீதிவழங்கும் தெய்வமாக விளங்கி வருகிறது.

குயிலியின் உயிர் தியாகம்:

சிவகங்கையை காப்பாற்ற மருதுசகோதரர்கள் தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைக்குள் அமைந்துள்ள ராஜேஸ்வரி அம்மனுக்கு விஜயதசமி நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்திற்குள் குயிலி என்கிற பெண் உடல் முழுவதும் வெண்ணெய் தடவிக்கொண்டு ஆங்கிலேயர் ஆயுதக்கிடங்கிற்கு குதித்து முதல் தற்கொலை போராளியானார்.இதுவே உலகின் முதன் முதலில் நடந்த மனித வெடிகுண்டு.  குயிலி சின்ன வயதிலேயே தாயை இழந்ததால் அன்பு அரவணைப்பு எல்லாம் வேலுநாச்சியார் தான். குயிலி தன் தந்தையை போல் சிறந்த ஒற்றராக விளங்கினார். இவரது பணி வேலுநாச்சியாருக்கு பல்வேறு ஆபத்தான கட்டங்களில் உதவியாக இருந்திருக்கிறது.அப்படி இருந்த குயிலி ஆயுதக்கிடங்கை அழிக்க முற்பட்ட போது கூட வேலுநாச்சியார் “நீ சின்ன பொண்ணு அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லிய போதும் ; அவர் பேச்சைக்கேட்காமல் நாட்டின் சுதந்திரத்திற்காக முதல்; மனித வெடிகுண்டாக மாறினார்.
தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியும் வெற்றி பெற்ற வேலுநாச்சியார். தன் கணவனைக்கொன்றவர்களை கொல்லவேண்டும் என்று திட்டமிட்டார். அதன்படி ஜோசப்ஸ்மித் பான்ஜோர் ஆகியோரையும் தோற்கடித்தார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25ம் தேதி பூமி தாயின் மடியில் சாய்ந்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios