அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தங்கள் கட்சியில் இணைந்து விட்டதாகக் கூட திமுகவினர் பொய் கூறுவார்கள் என பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் விமர்சித்துள்ளார். 

பிரதமர் மோடி பிறந்தநாளைமுன்னிட்டு சென்னை நங்கநல்லூரில் பாஜகவினர் தனியார் சுவற்றில் விளம்பரம் செய்திருந்தனர். பிறந்தநாள் விழா முடிந்ததும் சுவர் விளம்பரத்தை திமுகவினர் அழித்துவிட்டு, அதில் விளம்பரம் எழுதினர். இதனால் திமுக மற்றும் பாஜக இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாஜகவின் மகளிர் அணியைச் சேர்ந்த 2 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக திமுகவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி சென்னை பாரிசில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பாஜகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் பங்கேற்று பேசிய போது, ’’டீக்கடை மற்றும் பிரியாணி கடைகளுக்கு திமுகவினால் பாதுகாப்பு இல்லை. அதேபோல் காவல்துறையினருக்கும் திமுகவால் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பாஜகவின் கொடி பறப்பதால் திமுக அச்சமடைகிறது. தமிழகத்தில்  தாமரை மலர்ந்து விட்டது. இது பழைய பாஜக இல்லை. பாஜக 2.0

 திமுகவில் இருந்து வெளியேறுபவர்கள் அதிமுகவில் இணைவது வழக்கம். ஆனால் தற்போது திமுகவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பாஜகவில் இணைந்துள்ளதார். இது பாஜகவின் வளர்சிக்கு உதாரணம். உலகமே பார்த்து பயப்படும் சீனாவை ஓடவிடும் கட்சி பாஜக. எங்களுக்கு திமுக எல்லாம் கால்தூசி. திமுகவில் ஏராளமான இளைஞர்கள் செல்வதாக கூறப்படுவது பொய். விட்டால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட திமுகவில் இணைந்து விட்டதாக திமுகவினர் பொய் கூறுவார்கள்’’என அவர் கடுமையாக விமர்சித்தார்.