தேர்தல் சமயங்களில் தொண்டர்களுக்கு தெம்பூட்ட மாநாடுகளை நடத்துவது கட்சிகளின் வழக்கம். அதிமுக சார்பில் இம்மாதம் 24ல் விழுப்புரத்திலும், திமுக சார்பில் மார்ச் 14ல் திருச்சியிலும் மாநாடுகள் நடைபெறவுள்ளன. பெரிய கட்சிகள் இப்படி அதகளம் செய்யும்போது சிறிய கட்சிகள் சும்மா இருக்க முடியுமா? தங்கள் பலத்தை காட்டி சீட்டு பேரத்தை அதிகரிக்க இந்த கட்சிகளும் மாநாடுகளை நடத்தத் தொடங்கிவிட்டன.

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இதில், பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சியை தாராளமாக புகழ்ந்து தள்ளினார். இதில் பூரிப்படைந்த தோழர்கள், ‘’சீட்டு விஷயத்திலும் இப்படி தாராளத்தைக் காட்டினால் நன்றாக இருக்கும்’’என பேசிக்கொள்கின்றனர்.

திமுக தரப்பில் இதுபற்றி கேட்டால்,’’இந்த மாநாடு டெக்னிக்கெல்லாம் எங்களுக்குத் தெரியாதா? கம்யூனிஸ்டுகளை தொடர்ந்து காங்கிரஸ், மதிமுக, விசிக, மமக என எல்லா கட்சிகளுமே மாநாடு போட்டு சீட்டுகளை அதிகமாக கேட்கும். அவர்கள் கேட்கிறதையெல்லாம் கொடுத்தால் கடைசியில் நாங்க ஒற்றப்படையில்தான் நிற்கணும். அதனால் கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் பாணியிலேயே நாங்க திருச்சி மாநாட்டில் பதிலளிப்போம்’’ என்கிறார்கள்.