Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டில் முதலமைச்சராக தகுதியான ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான் - என்னமா புகழ்றாரு வைகோ...

The only leader capable of being Chief Minister in Tamil Nadu is MK Stalin - what is it?
The only leader capable of being Chief Minister in Tamil Nadu is MK Stalin - what is it?
Author
First Published Apr 12, 2018, 9:00 AM IST


தேனி

தமிழ்நாட்டில் முதலமைச்சர் வேட்பாளராக 40 பேர் உள்ளனர். ஆனால், முதலமைச்சராக தகுதியான ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின் தான் என்று கம்பத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ தெரிவித்தார்.

தேனி மாவட்டம், போடி அருகே பொட்டிப்புரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 31-ஆம் தேதி மதுரையில் நடைபயணத்தை தொடங்கினார்.

மதுரை, தேனி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்ட அவர் கடைசி நாளான நேற்று  முன்தினம் கூடலூரில் தனது பயணத்தை தொடங்கி கம்பத்தில் நடைபயணத்தை நிறைவு செய்தார். 

இதனையடுத்து நிறைவு நாள் பொதுக் கூட்டத்தில் கம்பம் வ.உ.சி. திடலில் நடந்தது. இந்த விழாவில் பேசிய வைகோ, "நடைபயணம் தொடங்கிய நாள் முதல், செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் திரளாக வந்து வரவேற்றார்கள். 

இந்த பத்து நாள்களில் 200 கிலோமீட்டர் நடந்து வந்துள்ளோம். இது, ம.தி.மு.க. என்ற கட்சிக்காகவோ, வாக்குகளுக்காகவோ நடந்து வந்த பயணம் அல்ல. வருங்கால தலைமுறைகளை காப்பாற்றுவதற்காக நடந்து வந்துள்ளோம்.

நான் சாதிகளுக்கு அப்பாற்பட்டவன். என்னுடன் இருக்கும் பலர் என்ன சாதி என்றே எனக்கு தெரியாது. என் வாழ்க்கையில் நான் யாரையும் எதிரியாக நினைப்பது இல்லை. 

பிறப்பது ஒரு முறை. இனி நான் பிறக்கப்போவதில்லை. என் கலிங்கப்பட்டி மண்ணில்தான் நான் புதையுண்டு போவேன். அதுவரை தமிழகத்துக்காக வாழ்வேன். 

நான் பொதுவாழ்வில் மிக கவனமாக இருந்து வருகிறேன். விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களிடம் ஒரு பைசா கூட நான் வாங்கியது இல்லை. 37 விடுதலைப் புலிகள் என் வீட்டில் இருந்தார்கள். அவர்களுக்கு என் தாயார் சோறு பொங்கி போட்டார். என் கழுத்தில் நச்சுக் குப்பிகளை கட்டி விட்டவர் பிரபாகரன்.

பிரபாகரனை விட சிறந்த போராளி சேகுவராவும் இல்லை, மாவோவும் இல்லை. ஆனால் சாதியை சொல்லி, திருமலை நாயக்கரை இழிவுபடுத்துவதாக கூறி என்னை சீமான் இழிவுபடுத்துகிறார். நான் ஏற்றுக் கொண்ட ஒரே தலைவர் பிரபாகரன்தான்.

நியூட்ரினோ ஆய்வுக்கூடத்துக்கு சுரங்கம் அமைக்க வெடிமருந்துகள் வைத்து பாறையை உடைக்கும்போது, பாதிப்பு வராது என கூறும் இந்திய நியூட்ரினோ ஆய்வு மைய விஞ்ஞானிகள் கைக்கூலியாக செயல்படுகின்றனர். 

இந்தியாவில் உள்ள 22 அணு உலைகளின் அணுக்கழிவுகளை கொட்ட இடம் இல்லை. அதை இங்கே கொட்ட உள்ளனர். உலகில் அணுக்கழிவுகள் கொட்டப்பட்ட பகுதிகளில் எல்லாம் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் போராடுகிறார்கள். நான் எதை எதிர்பார்த்தேனோ அது நடந்து கொண்டு இருக்கிறது. அந்த போராட்டத்தை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். 

இதேபோல, நியூட்ரினோ திட்டத்தால் பாதிப்பு வரும் முன்பே போராட வேண்டும். தாமதித்தால் அழிந்து போவோம். போராட நாம் இருக்க மாட்டோம்.

தமிழகத்தை மோடி அழிக்க நினைக்கிறார். சமஸ்கிருதத்தை ஏற்க மறுக்கிறார்கள் எனவும், இந்துத்துவாவை ஆதரிக்க மறுக்கிறார்கள் எனவும் தமிழகத்தை அழிக்கப் பார்க்கிறார். மீண்டும் மோடியால் பிரதமர் நாற்காலியில் அமர முடியாது. அதற்காக தான் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளேன்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் வேட்பாளராக 40 பேர் உள்ளனர். ஆனால், முதலமைச்சராக தகுதியான ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின் தான்" என்று அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர் தனபாலன் மற்றும் பலர் பேசினர். கூட்டத்தில் ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் அழகுசுந்தரம், மாவட்ட செயலாளர் சந்திரன், கம்பம் நகர செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios