The next IT raid is the property of the ministers

தமிழகத்தை பொறுத்த வரையில் பூனைக்கும் தோழன், பாலுக்கும் காவல்...எனும் எக்கச்சக்க ஸ்ட்ராட்டஜியை கையில் எடுத்திருக்கிறது பி.ஜே.பி.யின் மத்திய தலைமை. கடந்த 3 நாட்களாக சசி வகையறாவை வளைத்து வளைத்து விளையாடி ஒரு முடிவை எட்டியிருக்கும் வருமான வரித்துறை ரெய்டின் சீசன் -2 தமிழக அமைச்சர்களை குறிவைத்ததாக இருக்கலாம் என்கிறார்கள்.
ஏன் அப்படி?

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக அரசை மத்திய அரசுதான் கொண்டு செலுத்தி செல்கிறது, டெல்லி சொல்லும்படிதான் இரு முதல்வர்களும் செயல்படுகிறார்கள் என்பது பெருமளவு உண்மைதான் என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் உணர்ந்து வைத்திருக்கிறது. தமிழகத்தை ஆட்டி வைக்கும் பி.ஜே.பி. எனும் விமர்சனம் தங்கள் மேல் விழுவதில் மோடிக்கோ, அமித்ஷாவுக்கோ எந்த கவலையுமில்லை. ஆனால் அப்படி ஆட்டி வைப்பதன் மூலம் தேர்தல் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் சமீபத்தில் மத்திய உளவுத்துறை தமிழகத்தில் நடத்திய ரகசிய ஆய்வின் படி தமிழக அமைச்சரவை மீது மக்கள் மிக மோசமான கடுப்பில் இருக்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறது. அ.தி.மு.க.வின் தொண்டர்களும் எடப்பாடி - பன்னீர் அணியின் மேல் பெருமளவு விசுவாசத்தை பொழியவில்லை என்பதும் புரிந்திருக்கிறது. இதனால் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க. பெரியளவில் அதிகாரங்களை பெற்றிட வாய்ப்பில்லை என்பது புலனாகியிருக்கிறது. 

இந்த ரிப்போர்ட்டை வைத்து கலந்தாலோசித்த மோடியும், அமித்ஷாவும் மளமளவென தங்களின் ஸ்ட்ராட்டஜியை மாற்றியிருக்கிறார்கள். அதன் விளைவே கருணாநிதியை கோபாலபுரத்தில் சந்தித்தது. இதன் மூலம் தமிழக அரசியலில் சிக்ஸரடித்திருக்கிறது பி.ஜே.பி. எப்படியென்றால் தான் தி.மு.க.வுக்கு எதிரியில்லை என்பது நிரூபித்தாகிவிட்டது,

தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உறவில் விரிசில் உண்டாக்கியாகிவிட்டது, மத்திய அரசு தங்கள் தோளில் கைபோட்டிருக்கிறது என்று மமதையுடன் இருந்த தமிழக அமைச்சரவையை ஆட வைத்தும் ஆகிவிட்டது. குறிப்பாக நாங்களொன்றும் ஆளும் அ.தி.மு.க. அணியுடன் நெருங்கிய நட்பில் இல்லை என்பதையும் அழுத்தமாக தெரிவித்தாகிவிட்டது. 

மோடி விசிட் முடிந்ததுமே ரெய்டு சூறாவளி தமிழகத்தை சுழற்றியடித்திருக்கிறது. இதும் விதவிதமான அரசியல் நகர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

குறிப்பாக ‘அன்புநாதன் வீட்டில் சிக்கிய டைரியின் படி நடவடிக்கை என்னாச்சு? சேகர் ரெட்டி கக்கிய வாக்குமூலத்தின் படி நடவடிக்கை என்னாச்சு?’ என தினகரனும், ‘நத்தம் விஸ்வநாதன் வீட்டில் நடந்த ரெய்டின் முடிவு என்னாச்சு? குட்கா அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டின் முடிவு என்னாச்சு?’ என்று ஸ்டாலினையும் கேட்க தூண்டியிருக்கிறது இந்த ரெய்டு. 

ஆக இந்த விமர்சனங்களையும், கோரிக்கைகளையும் நோக்கி மக்கள் பயணிக்கும் நிலையில் கூடிய விரைவில் தமிழக அமைச்சர்கள் கணிசமான நபர்களின் சொத்துக்களில் ரெய்டு உறுதியாக நடக்கும் என்கிறார்கள். தங்களுடன் மிக இணக்கமாக இருக்கும் போதே டாக்டர் விஜபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்திய பி.ஜே.பி. இப்போது தி.மு.க. பக்கமும் திரும்பிப் பார்க்க திரும்பியிருக்கும் நிலையில் ஒட்டுமொத்தமாய் அமைச்சர்களின் வீட்டில் ரெய்டு நடத்துவதில் எந்த தயக்கமும் இருக்காது என்றே நினைக்கிறது ஆளும் அ.தி.மு.க. அணி. இதனால் அடி வயிறு கலங்கி கிடக்கிறார்கள். 

அமைச்சர்களின் வீட்டில் ரெய்டு நடத்துவதின் மூலம் தமிழ அமைச்சர்களுக்கும் தங்களுக்கும் எந்த நெருக்கமுமில்லை என்பதை நிரூபிப்பதோடு, வெறுப்புக்கு ஆளாகியிருக்கும் அமைச்சர்களை கலங்கடிக்க வைத்து அதன் மூலம் மக்களின் அபிமானத்தையும் பெற பி.ஜே.பி. சற்றும் தயங்காது! என்று தகவல் வருகிறது. 
ஆக அடுத்த சூறாவளிக்கு தமிழகம் தயாராகலாம்!