புயல்போன்ற பேரிடர்களுக்கு 30ஆண்டுகால தொலை நோக்கு திட்டம் தேவை எனவும், நாகையில் நிரந்த பேரிடர் மீட்பு குழுவின் முகாம் ஒன்று அமைக்கப்படுவது  அவசியம் எனவும் தமிழக அரசுக்கு மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கோரிக்கை வைத்துள்ளார்.  

நிவர் மற்றும் புரவி புயல் பாதிப்பு மற்றும் தொடர் மழை தொடர்பான ஆய்வு கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமை ஏற்ற இந்நிகழ்வில் தமிழக அரசால் இதற்காக சிறப்பு பொறுப்பாக நியமிக்கப்பட்ட  அமைச்சர்கள் திரு.S.P .வேலுமணி, சி. விஜயபாஸ்கர் ஆகியோருடன் மாவட்ட அமைச்சர் O.S.மணியன் ஆகியோர் பங்கேற்றார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செல்வராஜ் MP,மற்றும் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி ஆகியோரும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதில் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது: 

பருவகால மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி புயல்கள் உருவாவதை இனி தவிர்க்க முடியாது, சர்வதேச வானிலை ஆய்வகமும் இதையே கூறுகிறது. இது போன்ற ஆய்வு கூட்டம் போட்டு உடனடி தீர்வு பற்றி பேசுகிறோம். இனி அடுத்த 30 ஆண்டுகளை கவனத்தில் கொண்டு நீண்ட கால திட்டங்களை வகுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன். 

மேலும் நாகையில் நிரந்த பேரிடர் மீட்பு குழுவின் முகாம் ஒன்று அமைக்கப்படுவது அவசியமாகும். ஒவ்வொரு முறையும் அவசரத்திற்கு வருவதை விட நிரந்தரமாக இங்கு அக்குழு இருப்பது நல்லது. புயல் நேரங்களில் மின் கம்பி அறுந்து உயிர் பலி ஏற்படுகிறது. மின் கம்பங்கள் விழுந்து வாரக் கணக்கில் மின் தடை ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில்  தரையில் மின் கம்பிகளை புதைப்பது அவசியம் என சட்டசபையில் வலியுறுத்தி இருந்தேன். 

அதன் நிலை என்னவென்பதை அறிய விரும்புகிறேன்.நாகை தொகுதியில் பேரிடர் நேரங்களில் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க பன்னோக்கு பேரிடர் மையங்கள் அவசியமாகும். அந்த வகையில் கடலோர மக்களுக்காக நம்பியார் நகரில் ஒன்று, உட்பகுதியில் வசிக்கும் குடிசைவாழ் மக்களுக்காக நாகை ஒன்றியத்தில் ஒன்றும், திருமருகல் ஒன்றியத்தில் ஒன்றும் தேவை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். 

அவரது பேச்சுக்குப் பின்னர் அவரது கோரிக்கையை 3 அமைச்சர்களும் மேற்கோள் காட்டி பேசினர். இக்கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் .S.P .வேலுமணி கூறினார். அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் அவர்கள் பேசும் போது தமிமுன் அன்சாரி சொன்னதைத்தான், முதல்வரும் நீண்ட கால திட்டம் தேவை என தங்களிடம் கூறியதாக குறிப்பிட்டார்.