இந்த தேசம் மதிப்புமிக்க மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது, பிரணாப் முகர்ஜியின் மறைவு ஒரு சகாப்தம் கடந்து சென்றது போலாகும் என்று குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மூளையில் ஏற்பட்ட சிறிய கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக கடந்த 10ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா இருப்பது தெரியவந்தது.

இருப்பினும் பிரணாப் முகர்ஜிக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டபின் கோமா நிலைக்குச் சென்றார். கடந்த சில வாரங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று பிரணாப் முகர்ஜி காலமானார்.குடியரசுத் தலைவர் 
ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட இரங்கல் செய்தியில்..

"பிரணாப் முகர்ஜி காலமான செய்தி கேட்கவே வேதனையாக இருக்கிறது. பிரணாப் முகர்ஜியின் மறைவு ஒரு சகாப்தம் கடந்து சென்றது போல் இருக்கிறது. இந்த தேசம் மதிப்பு மிக்க மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது.பொது வாழ்க்கையில் ஒரு மகத்தான மனிதர். பாரததேசத்துக்கு, துறவியைப் போன்று உணர்வுப்பூர்வமாக சேவையாற்றினார். தேசம் தனது மதிப்புமிக்க மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. 

பிரணாப்முகர்ஜி குடியரசுத் தலைவராக இருந்தபோது பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தை ஒருங்கிணைக்கக் கூடியவராகத்திகழ்ந்தார். 50 ஆண்டுகால சிறப்பான பொது வாழ்வில் அவர் வகித்த பதவிகளை பொருட்படுத்தாமல் மக்களோடு ஆழ்ந்த தொடர்பில் இருந்தார். அரசியல்வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களையும் பிரணாப் முகர்ஜி நேசித்தார்.நாட்டின் முதல் குடிமகனாக இருந்த பிரணாப் முகர்ஜி, அனைவருடன் தொடர்பில் இருந்தார், குடியரசுத் தலைவர் மாளிகையை மக்களோடு நெருக்கமாக வைத்திருந்தார்.