ஆயிரமும் மத பிரச்சாரங்கள் சமூகத்தை பிளவுபடுத்தும் வெறுப்பு பேச்சுகள் தலை தூக்கினாலும் சாதி மதங்கள் வேறுவேறு என்றாலும், அனைவரும் இந்தியர்களே நாம் அனைவரும் மனிதர்களே என்ற மாந்தநேய தத்துவத்தை இந்த நிகழ்வு சமூகத்திற்கு உரத்து சொல்லியிருக்கிறது 

அடக்கம் செய்ய ஆளில்லாமல் இறந்துபோன இந்து இளைஞரின் சடலத்தை சுமந்து சென்று இஸ்லாமியர்கள் இந்து முறைப்படி அடக்கம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறிந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இதை சம்பவத்தை பாராட்டி வருவதுடன் இதுதான் இந்தியா என்றும் பெருமிதத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மூச்சு அடங்கிவிட்டால் சாதி ஏது மதம் ஏது ..? வெறும் சடலம் தான்.. இதுவே இயற்கையின் நியதி. ஆனால் மனிதர்கள் வாழும் வரை சாதியாகவும், மாதங்களாகவும் பல்வேறு கூறுகளாக பிரிந்து உள்ளனர். ஆனாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாகவே அன்பை பரிமாறிக் கொள்கின்றனர். ஆனால் சமீபகாலமாக சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் மக்களின் உணர்வை தூண்டி அதன்மூலம் குளிர்காயும் வெறுப்பு அரசியல் சமூகத்தில் அதிகரித்து வருவதை சமூகத்தில் காண முடிகிறது. இந்துக்கள் என்றும் இஸ்லாமியர்கள் என்றும் கிறிஸ்தவர்கள் என்றும் மக்களிடையே பேதம் கற்பிக்கும் சித்தாந்தங்கள் சமூகத்தில் ஊடுருவி, ஆங்காங்கே பூசல்களை ஏற்படுத்தி வருகிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

ஆனால் அது அனைத்தையும் கடந்து அடிக்கடி மனிதநேயம் என்ற புள்ளியில் சமூகத்தில் ஏற்படும் பிணைப்புகள் ஆறுதலை ஏற்படுத்துவதாக உள்ளது. அப்படிப்பட்ட ஒரு நெகிழ்ச்சி சம்பவம் தான் வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் கல்லூர் பகுதியை சேர்ந்தவர் வேலு- குப்பு தம்பதியர். இவர்களுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் வேலுவும் அவரின் ஒரு மகன் இறந்து விட்டனர். இக்குடும்பத்திற்கு என வீடு வாசல் இல்லாததால் குப்பு தனது இரண்டு மகன்களுடன் பிளாட்பாரத்தில் தங்கி வசித்து வந்தார். இந்நிலையில் 30 வயதான தினேஷ் என்ற மகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்து சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது.

குப்பு தனது மகனுடன் இருந்து அவரை கவனித்து வந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்து போன மகன் தினேஷின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாததால் ஆண்டவா நான் என்ன செய்வேன் என ஏழைத்தாய் குப்பு கதறி அழுதார். இந்த தகவல் மஜித்தே சேவை என்ற இஸ்லாமிய அமைப்பின் கவனத்திற்கு சென்றது. ஆதரவற்ற இந்து இளைஞனின் உடலை அடக்கம் செய்ய அந்த அமைப்பினர் உடனே முன்வந்தனர். அடக்கம் செய்ய வந்த ஆறு பேரும் இஸ்லாமியர்கள், அவர்கள் ஒன்றுகூடி தினேஷின் உடலை வாகனத்தில் ஏற்றி சுடுகாட்டுக்கு கொண்டு சென்று அங்கு இந்து முறைப்படி அடக்கம் செய்தனர்.

இதற்கான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஆயிரமும் மத பிரச்சாரங்கள் சமூகத்தை பிளவுபடுத்தும் வெறுப்பு பேச்சுகள் தலை தூக்கினாலும் சாதி மதங்கள் வேறுவேறு என்றாலும், அனைவரும் இந்தியர்களே நாம் அனைவரும் மனிதர்களே என்ற மாந்தநேய தத்துவத்தை இந்த நிகழ்வு சமூகத்திற்கு உரத்து சொல்லியிருக்கிறது என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. இஸ்லாமிய அமைப்பின் இந்த மனிதநேய சேவையை பலரும் மனம் திறந்து பாராட்டி வருகின்றனர்.