மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க கோரி துணைநிலை ஆளுநர் மாளிகையை தடையை மீறி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான 15 முக்கிய கோப்புகளுக்கு  துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஓப்புதல் அளிக்க கோரியும், விவாதிக்க நேரம் வழங்க கோரியும் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று 10வது நாளாக சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். 

இந்நிலையில் நேரம் ஒதுக்காமலும், ஒப்புதல் அளிக்காத நிலையிலும் திடீரென சட்டசபையில் இருந்து தடையை மீறி ஆளுநரை சந்திக்க முயற்சி செய்தார் அமைச்சர் கந்தசாமி. ஆனால் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் துணை ராணுவத்தினர் தடுத்தி நிறுத்தியதால் ஆளுநர் மாளிகை அருகே சாலையில் அமர்ந்து  அமைச்சர் கந்தசாமி தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் துணைநிலை ஆளுநரை சந்தித்த பின்னர் தான் செல்வேன் என திட்டவட்டமாக தெரிவித்து தொடந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றார். அமைச்சரின் முற்றுகை காரணமாக 100க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் அமைச்சர் கந்தசாமியை சந்திக்க சென்ற முதல்வர் நாராயணசாமியை துணை இராணுவ படையினர் தடுத்து நிறுத்தியதால் முதல்வர் நாராயணசாமி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சாலையில் அமர்ந்து போராடத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் அமைச்சர் மல்லாடி, எம்.பி.வைத்திலிங்கம், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.