தான் முக கவசம் அணிவதில்லை என மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கலந்து கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில் அவர் முக கவசம் அணியவில்லை.

 

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ’’நான் முக கவசம் அணியமாட்டேன்’என கூறினார்.  நாடு முழுவதும் கொரோனா வைரசின் பாதிப்புகளால் மக்கள் அவதிப்படும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்துகளும் இல்லாத சூழலில், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும்படி அரசால் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

பொது இடங்களுக்கு செல்வோர் முக கவசம், தனிமனித இடைவெளி ஆகியவற்றை முறையாக கடைப்பிடிக்கும்படி வலியுறுத்தப்படுகின்றனர்.  ஆனால், பா.ஜ.க. ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் அரசின் விதிமுறைகளை பின்பற்றாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தனது பேச்சுக்கு மிஸ்ரா வருத்தம் தெரிவித்து உள்ளார். அது விதிமீறிய பேச்சு என்றும், தனது தவறை ஒப்பு கொள்கிறேன் என்றும் மிஸ்ரா கூறியுள்ளார்.  தொடர்ந்து அவர், நான் முக கவசம் அணிந்து கொள்வேன்.

ஒவ்வொருவரும் முக கவசம் அணிந்து கொள்ளுங்கள் என நான் கேட்டு கொள்கிறேன்.  நீங்கள் சமூக இடைவெளியையும் கடைபிடியுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.