அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதன் இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இரு அணிகளும் இணைவதாக தகவல் வெளியானது. பேச்சவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதால் இணைப்பு இன்னும் சில நாட்களில் நடைபெறும் என்று ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். கூறியிருந்தனர்.

அமைச்சரவையில் ஓ.பி.எஸ். அணிக்கு இரண்டு துறைகள் ஒதுக்கப்பட இருந்ததாக கூறப்பட்டது. தற்போது 3 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் நாளை இரு அணிகளும் இணைவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், நாளை அதிமுக நிர்வாகிகள் குழுக் கூட்டம் நடக்க உள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தின்போது
முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

அதேபோல், சசிகலாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ். அணியினருக்கு கட்சி பதவி கொடுத்தால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று டிடிவி தினகரன் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.