இது நாள் வரை செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் தற்போது திமுகவிற்கு தலைவராக மாறி இருக்கிறார். வெளியில் இருந்து பார்க்கும் பலர் வாரிசு அரசியல் என்று இதனை கூறினாலும் ஸ்டாலின் இந்த தலைவர் பதவியை அடைந்திட கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. ஒரு சாதாரண தொண்டனாக திமுகவிற்கு டன் பங்களிப்பினை தொடங்கிய ஸ்டாலின் இன்று தலைவர் எனும் பதவியை அடையும் வரை ஓடி இருக்கும் அரசியல் ஓட்டம் கொஞ்சம் நீளமானது தான்.

கலைஞருக்கு மூன்றாவது மகனாக பிறந்த இவர் எல்லா விதத்திலுமே கொஞ்சம் சிறப்பு தன்மைகள் வாய்ந்தவர் தான். பொதுவாக கலைஞரின் குடும்பத்தில் எல்லா நபர்களின் பெயருமே தூய தமிழ் பெயராக தான் இருக்கும் ஆனால் ஸ்டாலினின் பெயர் மட்டும் அப்படி இருக்காது. 

முதலில் ஸ்டாலினுக்கு கலைஞரு சூட்ட இருந்த பெயர் அய்யா துரை என்பது தான். இந்த பெயரை சூட்ட கலைஞர் விரும்பியதற்கும் ஒரு காரணம் இருந்திருக்கிறது. தந்தை பெரியாருக்கு அய்யா என செல்ல பெயர் உண்டு அந்த பெயரையும், அண்ணாதுரையில் இருந்து துரை என்பதையும் எடுத்து அய்யாதுரை என்று பெயரிட நினைத்திருக்கிறார் கலைஞர்.

ஆனால் ஒரு சமயம் ரஷ்ய புரட்சியாளர் ஸ்டாலினின் மரணத்தை அடுத்து நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் அவரை பற்றி சிலாகித்து கலைஞர் பேசி கொண்டிருந்திருக்கிறார். அப்போது தான் அவருக்கு மகன் பிறந்ததாக செய்தி வந்திருக்கிறது. உடனே அவர் அந்த இடத்தில் வைத்தே தன் மகனுக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டி இருக்கிறார்.

இவ்வாறு பிறந்த தினத்தன்றே அவரின் வாழ்க்கை பயணத்தை புரட்சியாளர் ஸ்டாலினின் வழியில் துவங்கி இருக்கிறார் ஸ்டாலின். புரட்சியாளரும் போராளியுமான ஜோசஃப் ஸ்டாலினை போலவே தான் ஸ்டாலினின் வாழ்க்கை பயணமும் இருந்திருக்கிறது. அதற்கு பின் வரும் சம்பவமே ஒரு நல்ல உதாரணம் என்று கூறலாம். ஸ்டாலினை கலைஞர் பள்ளியில் சேர்க்க முயன்ற போது அவரது பெயரை காரணம் காட்டி சேர்க்க மறுத்திருக்கின்றனர் பள்ளி நிர்வாகத்தினர். புரட்சியாளரின் பெயரை வைத்திருக்கிறீர்கள். இந்த பெயரை வேண்டுமானால் மாற்றி விட்டு வாருங்கள் இங்கே சேர்த்து கொள்கிறோம் என்றும் அப்போது அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

பெயரை மாற்ற மறுத்த கலைஞர் பள்ளியை மாற்றி இருக்கிறார். அதன் பிறகு சென்னை கிறுஸ்தவ கல்லூரியில் இருந்த பள்ளியில் தன் பள்ளி படிப்பை முடித்த ஸ்டாலின் பள்ளி மாணவனாக இருந்த போதே அரசியல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார். 

1968 ஆம் ஆண்டில் கோபலபுரத்தில் உள்ள அரசியல் ஆர்வம் மிகுந்த இளைஞர்களுடன் இணைந்து  இளைஞர் திமுக எனும் அமைப்பினை ஆரம்பித்த ஸ்டாலின் அந்த அமைப்பின் மூலம் அப்பகுதி மக்களுக்கு தொண்டாற்றி இருக்கிறார்.
அப்போது அவர் போட்ட பிள்ளையர் சுழி தான், 1980ல் திமுக அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்த இளைஞரணியில் அவரை அமைப்பாள ஆக்கியது. 1980ல் திமுகவின் இளைஞரணி முதன்முதலாக மதுரையில் வைத்து தொடங்கப்பட்டது. அதன் பின்னர்  அந்த இளைஞரணிக்காக 7 பேர் கொண்ட ஒரு அமைப்பு குழு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு குழுவில் ஸ்டாலினும் ஒரு அமைப்பாளராக நியமிக்கபட்டார் அதன் பின்னர் இந்த இளைஞரணி மூலம் திமுகவிற்காக அவர் எடுத்து செயலாற்றிய மாபெரும் முயற்சிகளின் பயனாக ஸ்டாலின் திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக ஆனார்.

ஆனால் இதற்கெல்லாம் முன்னதாக அவர் கட்சியில் தன்னை ஒரு அடிப்படை தொண்டனாக இணைத்து கொண்டு, கட்சிக்காக களப்பணிகளை மேற்கொண்டிருக்கிறார். 1970களில் திமுகவின் வட்ட பிரதினிதியாக முன்னேறிய ஸ்டாலின் கழகத்தின் பேயரால் இளைஞர்களை ஒன்றிணைத்து கொண்டு கட்சி கூட்டங்களை திறம்பட நடத்துவது. கழகத்திற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவது போன்ற பணிகளை திறம்பட செய்திருக்கிறார்.

தலைவனின் மகன் என்பதற்காக அரசியல் அவருக்கு அவ்வளவு எளிமையானதாக அமைந்துவிடவில்லை. 1975ல் வந்த மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திமுகவினரில் ஸ்டாலினும் ஒருவர். மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற ஸ்டாலின் அங்கு அடி உதை என சித்ரவதைகளை அனுபவித்திருக்கிறார். தன்னுடைய அரசியல் திறமைகளை இவ்விதம் பலமுறை கட்சிக்கு உணர்த்தி இருக்கிறர் ஸ்டாலின். 

அதிலும் இளைஞரணியின் அலுவலகம் செயல்படுவதற்காக ஸ்டாலின் எடுத்து கொண்ட முயற்சி ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் கூட. திமுக இளைஞரணிக்காக அறிவகத்தை ஒதுக்கி தரும்படி இளைஞரணி சார்பில் அப்போது கோரிக்கை வைத்திருக்கிறார் ஸ்டாலின். அதே சமயம் அறிவகத்திற்காக திமுகவின் தொழிலாளர் அணியும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

இந்த விஷயத்தில் முடிவெடுத்திடும் முன்னர் ஸ்டாலினின் இளைஞரணிக்கும், திமுக தொழிலாளர் அணிக்கும் இடையே ஒரு போட்டி வைத்திருக்கிறார் அன்பழகன். அதன் படி இந்த இரு அணிகளில் யார் கட்சிக்கு 10 லட்சம் ரூபாய் நிதி தருகின்றனரோ அவருக்கு தான் அறிவகம் என கூறி இருக்கிறார். இந்த சவாலை ஏற்ற ஸ்டாலின் கட்சி தொடர்பான ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இரவு பகல் என பாராது முயற்சி செய்து 11 லட்சம் ரூபாய் நிதி திரட்டி கொடுத்திருக்கிறார். அசந்து போன அன்பழகன் இளைஞரணிக்கு அந்த இடத்தை கொடுத்திருக்கிறார். 

1980க்கு பிறகு இளைஞரணிக்கு செயலராக நியமிக்க பட்ட ஸ்டாலின் தொடர்ந்து திமுக இளைஞரணியை திறம்பட நடத்தி வந்திருக்கிறார். தந்தையே மகனை பார்த்து பெருமை கொள்ளும் படியான தருணம் ஒன்று அப்போது சமயத்தில் நிகழ்ந்திருக்கிறது.  திமுக இளைஞரணியை மிகவும் திறம்பட நடத்திய ஸ்டாலின், 1990ல் கலைஞர் ஒருங்கிணைத்து நடத்திய ஐம்பெருவிழாவின் போது திமுக இளைஞரணியினரை இராணுவம் போல சீராக நடைபோட்டு வரும்படி ஒருங்கிணைத்து அந்த இளைஞரணி படையை தலைமை தாங்கி கம்பீரமாக நடைபோட்டு வந்திருக்கிறார். இதை பார்த்து அசந்து போன பிரதமர் வி.பி.சிங் இந்த ஒருங்கிணைப்பை பாராட்டி இருக்கிறார். இந்த இளைஞரணியின் செயலாளர் என் மகன் என பெருமையுடன் அப்போது கூறி இருக்கிறார் கலைஞர்.

திமுகவில் பல பொறுப்புகளை வகித்த ஸ்டாலின் முதல் முதலாக தேர்தல் களம் கண்டது 1984ல் தான். சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் முதல் முதலாக போட்டி இட்ட அவர் அதிமுக வேட்பாளரிடம் தோற்றுவிட்டார். அதன் பிறகு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அவர் தொடர்ந்து பல முறை ஆயிரம் விளக்கு பகுதியில் நின்றௌ வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்திருக்கிறார். அதன் பிறகு 2011 முதல் கொளத்தூர் தொகுதியில் போட்டி இட ஆரம்பித்த ஸ்டாலின் தொடர்ந்து இரு முறையும் வெற்றி பெற்றிருக்கிறார்.

1196 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் மேயராக மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் தான் மேயராக இருந்த காலகட்டத்தில் மக்கள் மனம் புரிந்து பல நலதிட்டங்களை செய்திருக்கிறார். துப்புறவு பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து நவீனமுறையில் குப்பைகளை அகற்றும் திட்டத்தினை கொண்டு வந்த ஸ்டாலின் மக்கள் மனதில் நல்ல மேயராக பதிய துவங்கினார். இவர் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்த போது தான் சென்னையில் 9 புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டன.18 பூங்காக்கள் நிறுவப்பட்டன. 

பல பூங்காக்கள் சீரமைக்கப்பட்டன. தொடர்ந்து அவர் செய்த நற்செயல்களின் விளைவாக மீண்டும் சென்னை மேயராக மக்களால் தேர்வு செய்யப்பட்டார் ஸ்டாலின். ஆனால் இரண்டாவது முறை அரசியல் சூழல் அவருக்கு சாதகமாக இல்லை.
அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஒரு புதிய சட்டத்தை கொண்டுவந்தது. அதன் படி ஒரு நபரால் இரண்டு பதவிகளில் இருக்க முடியாது. ஏற்கனவே எம்.எல்.ஏ பதவியில் இருந்த ஸ்டாலின் இதனால் மேயர் பதவியை துறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் 2006ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த போது உள்ளாட்சித்துறை அமைச்சராக நியமிக்கபட்ட ஸ்டாலின் 2011 வர அமைச்சராக பொறுப்பில் இருந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் 2009 ஆம் ஆண்டு கலைஞரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பொறுப்பு ஸ்டாலினிடம் தான் அதிகம் இருந்தது அப்போது அவருக்கு துணை முதல்வர் எனும் பதவி வழங்கப்பட்டது. 

தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் துணை முதல்வர் எனும் பெயரை ஸ்டாலின் இதனால் அடைந்தார்.
திமுகவிலும் கூட இவருக்காக தான் செயல் தலைவர் என்ற பதவியே உருவாக்கப்பட்டது. குடும்ப பிரச்சனைகள் அரசியல் தடைகள் என எத்தனையோ பிரச்சனைகள் வந்த போதும் கூட தனக்கு என ஒரு இடத்தை உருவாக்கி கொள்வதில் வல்லவர் ஸ்டாலின் என்பதற்கு இந்த பதவிகளே உதாரணம். இதுவரை கலைஞரின் கீழ் இருந்து பொறுப்பாக செயல்பட்ட போதே இத்தனை சாதனைகளை செய்திருக்கு  ஸ்டாலின் தற்போது முழுமையாக திமுகவின் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். தான் தலைமை ஏற்றிருந்த இளைஞரணியை எப்படி கம்பீரமாக வழி நடத்தி சென்று கட்சிக்கு பலத்த தூணாக ஆக்கினாரோ, அதே போல கழகத்தினையும் இனி அவர் தலைமை வழி நடத்தும் என பெரும் ஆவல் இப்போது திமுகவினர் இடையே எழுந்திருக்கிறது.