சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் துவங்கி நடைப்பெற்று வருகிறது. கட்சி தலைமை அறிவிக்கும் வேட்பாளரை முழு மனதோடு ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என நேர்காணலுக்கு வந்தவர்களிடையே எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். 

சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட சுமார் 8250 பேர் விண்ணப்பித்துள்ளனர். விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணலை கட்சியின் ஆட்சிமன்ற குழு நேர்காணலை நடத்தியது.தங்கள் பெயரில் விருப்ப மனு அளித்தவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அனுமதிக்க ப்பட்டனர். நேர்காணலுக்கு வந்தவர்கள் செல்போன் , கைப்பை கொண்டு செல்லக்கூடாது , முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தபட்டது. 

ஒரு பேட்சுக்கு நான்கு மாவட்டங்கள் என்ற வீதத்தில் நேர்காணல் நடத்தப்பட்டது. ஒரு பேட்சுக்கு 15 நிமிடங்கள் மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டது. ஒரு தொகுதிக்கு பலர் விண்ணப்பித்திருந்தாலும் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய இயலும் எனவும், கட்சி தலைமை அறிவிக்கும் வேட்பாளரை மற்ற அனைவரும் முழு மனதோடு ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

தற்போது வாய்ப்பில்லாதவர்களுக்கு தகுதியில்லை என்ற அர்த்தமில்லை எல்லாருக்கும் பிறகு வாய்ப்பிருக்கிறது வெற்றி பெறுவது மட்டுமே நம் இலக்கு அதனை நோக்கி செல்ல வேண்டும் வேட்பாளர் நேர்காணலில் கலந்து கொண்டிருப்பவர்களில் யாராவது ஒருவர் கூட முதலமைச்ச ராகவோ, ஒருங்கிணைப்பாளராகவோ இருக்கலாம் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். நேர்காணலுக்கு வந்தவர்களுடைய வாகனங்களால் அவ்வை சண்முகம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.