மதுராந்தகம் அருகே, நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துகுள்ளானதில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் தன்னை குறிவைத்தே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு, அவருடைய காரில் வேல் யாத்திரைக்காக, கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, கார் சென்றபோது, புதுச்சேரி நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று முந்திச்செல்ல முயன்றது. அப்போது குஷ்பு சென்ற கார் மீது, லாரி மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. காரின் கண்ணாடி மற்றும் கதவு உடைந்தது. 

குஷ்புவிற்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த விபத்து குறித்து, வழக்கு பதிவு செய்த மதுராந்தகம் போலீசார், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் அப்துல் அக்கீம் என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள குஷ்பு, அவரை குறிவைத்தே, கண்டெய்னர் லாரி மோதியதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் சென்ற கார் சரியான பாதையிலேயே சென்றதாகவும், எங்கிருந்து வந்தது என்ற தெரியாத லாரி, கார் மீது மோதியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாறாக கார் கண்டெய்னர் லாரி மீது மோதவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

இது குறித்து கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள், ‘’1989ல் ஜெ கார் மீது லாரி மோதிய மாதிரியே. செட்டப்பு??? ஊர் குருவி பருந்தாகுமா? நடிகை குஷ்பு, ஜெயலலிதா ஆக முயற்சி?

1990 ல் ஜெயலலிதா 2020 ல் குஷ்பு அன்று சாதா லாரி இன்று கண்டைனர் லாரி அதே வழி முறைதான் ! அன்று ஜெயலலிதா கடுமையான காயம் ஆனால் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார் ! நல்ல வேளையாக குஷ்புவுக்கு காயம் இல்லை ! ஏதோ நடக்கிறது தமிழ் நாட்டில் ’’ என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.