அரசின் விரைவான நடவடிக்கைகளால் சென்னையில் பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பதா? வேண்டாமா? எந்தவிதமான தளர்வுகளை அறிவிக்கலாம் என்பது குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனைக் கூட்டத்தை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், மருத்துவக் குழுவினரின் கருத்துகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்படும். மேலும், தமிழக அரசின் தொடர் நடவடிக்கையால் சென்னையில் கொரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ளது. நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று குறைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீட்டிற்கும் பத்துக்கும் மேற்பட்ட முறை சென்று காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் இருக்கிறதா என்று கேட்டறியப்பட்டு வருகிறது. இதுவரை 14 லட்சம் பேர் காய்ச்சல் முகாம்களால் பயன் அடைந்துள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என்றார். தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.