Asianet News TamilAsianet News Tamil

உண்மைய வாங்காம விடமாட்டேன்! ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பிய விசாரணை ஆணையம்!

The IAS officers were summoned by the inquiry commission
The IAS officers were summoned by the inquiry commission
Author
First Published Jan 25, 2018, 1:02 PM IST


ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தனி செயலாளராக இருந்த 4 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் கார் ஓட்டுநருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னை, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு  லண்டன் டாக்டர், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள், அப்போலோ டாக்டர்கள் என சிகிச்சை அளித்தனர். 75 நாட்கள் சிகிச்சை பெற்று ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. 

இதையடுத்து ஜெ., மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன் அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி விசாரணை கமிஷன் விசாரணை செய்து வருகின்றது. 

இதில், சசி குடும்பத்தாரிடமும், ஜெ குடும்பத்தாரிடமும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஜெயலலிதாவுடன் நெருங்கி பழகியவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றார். அதன்படி ஒவ்வொருவராக சம்மன் அனுப்பி விசாரணை செய்து வருகிறது விசாரணை ஆணையம்.

அந்த வகையில் இன்று 2 வது முறையாக மருத்துவர் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சசிகலாவையும் ஆஜராக விசாரணை ஆணையம் வலியுறுத்தியது. ஆனால் அவர் சிறையில் மவுன விரதம் இருப்பதால் அவருக்கு பதிலாக அவரது வக்கீல் செந்தூர் பாண்டியன் ஆஜராகி எழுத்துபூர்வ அறிக்கையை தாக்கல் செய்தார். 

இந்த நிலையில், ஜெயலலிதாவின் முன்னாள் செயலாளர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெங்கட்ராமன், விஜயகுமார், ராமலிங்கம், ஜெயஸ்ரீ மற்றும் ஜெ.வின் கார் ஓட்டுநர் ஐயப்பனுக்கு, விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெ.வின் செயலாளராக இருந்த வெங்கட்ராமன், ஜனவரி 30 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்றும், முதலமைச்சரின் 2 ஆம் நிலை செயலாளராக உள்ள விஜயக்குமார் 31 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்றும், கலை மற்றும் கலாச்சாராத்துறை ஆணையராக இருக்கும் ராமலிங்கம் பிப்ரவரி 1 ஆம் தேதி ஆஜராகவும், ஜெயஸ்ரீ முரளிதரன் பிப்ரவரி 2 ஆம் தேதி ஆஜராகவும் விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெ.வின் கார் ஓட்டுநர் ஐயப்பன் பிப்ரவரி 8 ஆம் தேதி நேரில் ஆஜராகவும் சம்மன் விசாரணை கமிஷன் அனுப்பியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios