உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை, முழு அதிகாரம் படைத்த மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் நன்கு புரிந்து செயல்பட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு, அரசு விவகாரங்களில் தன்னிப்பட்ட முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உண்மையான அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே இருப்பதாக ஒரு அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் தந்துள்ளது.

இந்த தீர்ப்பு, துணை நிலை ஆளுநருடன் முட்டி மோதிக் கொண்டிருந்த ஆம் ஆத்மி அரசுக்கு பெரிய வெற்றியைத் தந்துள்ளது. மாநில அரசு முடிவெடுக்க முழு
சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், துணை நிலை ஆளுநர் அதற்கு தடையாக இருக்கக் கூடாது என்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட 5
நீதிபதிகள் அமர்வு கூறியது.

இது குறித்து அர்விந்த் கெஜ்ரிவால், தனது டுவிட்டர் பக்கத்தில் இது மக்களுக்கு கிடைத்த வெற்றி... ஜனநாயகத்துக் கிடைத்த வெற்றி என்று பெருமிதத்துடன்
கருத்து தெரிவித்திருந்தார். இன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு புதுச்சேரி அரசுக்கும் பொருந்தும் என புதுச்சேரி சபாநாயகர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

ஆளுநரின் ஆய்வு குறித்து ஆளும் அதிமுக அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், ஆளுநரின் ஆய்வு, மாநில உரிமைகளை மீறுவதாக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம், திமுகவினர் கருப்பு கொடி காட்டி வருகின்றனர். இன்று உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பால், தமிழகத்தில் ஏதாவது தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், மாநில அந்தஸ்தே இல்லாத டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் நடக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை வரவேற்கத்தக்கது என்றார்.

இதனை முழு அதிகாரம் படைத்த மாநிலங்களில் உள்ள ஆளுநர்களும், குறிப்பாக தமிழக ஆளுநர் இதனை நன்கு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று என்ற மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.