The Governor plan is not acceptable by Ramadoss condemned the recommendation
கிண்டி போலோ விளையாட்டு திடலை மக்கள் பார்வைக்காக திறந்து விடும் எண்ணத்தை ஆளுநர் மாளிகை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆளுநர் மாளிகை வளாகத்தை விடுமுறை நாட்களில் பொதுமக்கள் பார்வையிடலாம் என்ற வித்யாசாகர் ராவின் அறிவிப்பு தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாகவும், ஆனால் மக்கள் வசதிக்காக என்ற பெயரில் ஆளுநர் மாளிகை தயாரித்துள்ள திட்டம் கிண்டி தேசியப் பூங்காவில் வாழும் மான்களுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை 156.14 ஏக்கரில் செயல்பட்டு வருவதாகவும், இதில், 30 ஏக்கர் பரப்பளவில் போலோ விளையாட்டுத் திடல் அமைந்திருப்பதாகவும், குறிபிட்ட ராமதாஸ் ஆளுனர் மாளிகை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், போலோ திடலில் போட்டிகளை நடத்தி, அவற்றைக் பார்வையிட பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என ஆளுனர் மாளிகையிலிருந்து தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள பரிந்துரை மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக போலோ விளையாட்டுத் திடல் தான் கிண்டி தேசியப் பூங்காவில் வாழும் அரிதான புல்வாய் வகை மான்களின் உணவிடமாகவும், இனப்பெருக்கப் பகுதியாகவும் விளங்கி வருகிறது.
இந்தத் திடலில் போலோ போட்டிகளை நடத்தத் தொடங்கினால் புல்வாய் வகை மான்களின் இனப்பெருக்கம் தடைப்படக்கூடும் கூடும் எனவும், மேலும் புள்ளி மான், வெள்ளை மான், கீரி, முள்ளம்பன்றி போன்ற விலங்குகளும் பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மான்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கிண்டி தேசியப் பூங்காவிலிருந்து வெளியேறி அழிவைச் சந்திக்கும் ஆபத்துக்கள் அதிகமாக உள்ளதாகவும், இதையெல்லாம் சிந்திக்காமல் இப்படி ஒரு பரிந்துரையை ஆளுனர் மாளிகை அனுப்பியிருப்பது கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னையின் பசுமைப் போர்வைக்கு ஆதாரமாக திகழ்பவை ஆளுனர் மாளிகையிலிருந்து தொடங்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி தான் எனவும், போலோ திடலை திறந்து விடும் திட்டத்தை கைவிட்டு, அங்குள்ள வன வளத்தை பாதுகாக்கும் வகையில் ஏதேனும் திட்டத்தை ஆளுனர் மாளிகை செயல்படுத்த வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
