அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக சொந்த கண்ணோட்டத்தில் செயல்பட ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், அமைச்சரவை முடிவுகளுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவார் என்றால் அது கூட்டாட்சி அமைப்பின் மீது மிகப்பெரிய  பாதகத்தை ஏற்படுத்தும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக சொந்த கண்ணோட்டத்தில் செயல்பட ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், அமைச்சரவை முடிவுகளுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவார் என்றால் அது கூட்டாட்சி அமைப்பின் மீது மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் முட்டுக்கட்டையாக செயல்பட்டு வரும் நிலையில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.

பேரறிவாளன் தனது தண்டனை காலத்தை நிறைவு செய்தும், அவரை விடுவிக்காமல் கால தாமதம் செய்யப்பட்டு வருகிறது. தனது விவகாரத்தில் இன்னும் ஆளுநர் முடிவெடுக்காமல் இருக்கிறார் என்றும், விசாரணை அமைப்பு பல ஆண்டுகள் ஆகியும் அறிக்கை சமர்ப்பிக்காமல் இருக்கிறது என்றும் பேரறிவாளன் தரப்பு வாதம் முன் வைத்துள்ளது. இந்நிலையில்தான் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏன் பேரறிவாளனை நாங்களே விடுவிக்கக் கூடாது என்றும், அவரை யார் விடுவிக்க வேண்டுமென்ற சிக்கலில் ஏன் அவர் சிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியதுடன், ஆளுநரின் செயல்பாடுகளை சரமாரியான விமர்சித்துள்ளனர். மேலும் பேரறிவாளனை விடுவிப்பதில் ஆளுநர் குடியரசுத் தலைவர் என அதிகாரம் குறித்த விஷயங்களுக்குள் செல்லாமல் நாங்கள் ஏன் அவரை விடுதலை செய்யக்கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த வழக்கை முடித்து வைப்பதற்கு இதுவே ஒரே வழி என்று தாங்கள் நினைப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக வாதத்தை முன் வைத்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே பேரறிவாளனின் மரண தண்டனை என்பது குறைக்கப்பட்டுவிட்டது, அது குடியரசு தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. தற்போது சிறையில் இருந்து அவரை விடுதலை செய்வது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என கூறினார். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு வழக்கறிஞர், சாசனம் 22வது பிரிவின்படி ஆளுநரின் முடிவுகளை குடியரசுத் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும் என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஆளுநர் ஒவ்வொரு விஷயத்தையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார் என்றால், அதற்கான காரணத்தை அவர் விளக்க வேண்டும். பேரறிவாளன் தண்டனையை அனுபவித்து முடித்து விட்டார். நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட விடுதலையின் பலன்களைக் கொடுக்க மாநில அரசு நினைக்கிறது. 

ஆளுநர் தனிப்பட்ட அதிகாரத்தில் செயல்படுகிறாரா? நிர்வாக ரீதியில் செயல்படுகிறதா என கேள்வி எழுப்பினர். மாநில அரசு பரிந்துரை ஆளுநருக்கு அனுப்புகிறது பிடித்திருந்தால் அளுநர் பதில் தருவார் இல்லை என்றால் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விடுவாரா? எந்த அடிப்படையில் ஆளுநர் பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுத்தார். ஆளுநர் அதிகாரம் பற்றி மீண்டும் மீண்டும் விவாதிக்கப்பட்டு வருகிறது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு வழக்கறிஞர் மாநில அரசின் முடிவுகளை மத்திய அரசு ஆளுநரைக் கொண்டு எப்போதும் முடக்கி கொண்டிருந்தால் அது நாட்டின் கூட்டாட்சி அமைப்பை சீர் குலைத்துவிடும் என கூறினார். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு வழக்கறிஞர் பேரறிவாளன் முடிவுக்கு மாநில அரசு அதிகாரம், ஆளுநர் அதிகாரம், குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை முதலில் விலக்கப்பட வேண்டும் என வாதிட்டார்.

அப்போது கோபமடைந்த நீதிபதிகள் பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் அரசுக்கு இருக்கிறது என ஏற்கனவே அரசியல் சாசன அமர்வு தெளிவுபடுத்தி விட்டது. எனவே இந்த விவகாரத்தில் தயவுசெய்து ஆளுநரை கொண்டு வராதீர்கள். எனவே அரசியல் சாசன அமர்வு தீர்ப்பின்படி 7 பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக சொந்த கண்ணோட்டத்தில் செயல்பட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அமைச்சரவையில் ஒவ்வொரு முடிவுக்கு எதிராக ஒரு மாநில ஆளுநர் செல்வார் என்றால், அது கூட்டாட்சி கூட்டமைப்பில் மீது மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். ஒவ்வொரு முறையும் ஆளுநரின் முடிவு முரண்பட்டதாக இருக்கிறது.

வழக்கு தேவையில்லாமல் ஒத்திவைக்கப்பட்ட வேண்டியுள்ளது என அதிருப்தி அறிவித்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஏதாவது கருத்து சொல்ல விரும்பினால் அதை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும், இதேபோல் பேரறிவாளன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு தமிழக அரசு தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.