இந்தியாவிலேயே குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவையை தமிழக அரசு வழங்கி வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை கடந்த 20 ஆம் தேதி முதல் அமல்படுத்தி உள்ளது. அரசின் இந்த கட்டண உயர்வுக்கு பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து 60 பைசாவில் இருந்து 58 பைசாவாகவும், விரைவு பேருந்துகளில் 80 பைசாவில் இருந்து 75 பைசாவாகவும் குறைக்கப்பட்டது.

சொகுசு பஸ்களில் 90 பைசாவில் இருந்து 85 பைசாவாகவும், அதிநவீன பஸ்களில் 110 பைசாவில் இருந்து 100 பைசாவாகவும் குறைக்கப்பட்டது. இதன் மூலம் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-லிருந்து ரூ. 4 ஆக குறைக்கப்பட்டது. ஆனாலும், பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டி எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்தியாவிலேயே குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவையை தமிழக அரசு வழங்குவதாக அவர் தெரிவித்தார். பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் எந்த அரசும் இயங்க முடியாது என்றார். ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை போன்ற காரணங்களால் பேருந்து கடட்ணம் உயர்த்தப்பட்டதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்தார்.