விருதுநகர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங் வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை கறாராக அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.  

விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே செங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ஆலையில் உள்ள 2 அறைகள் இடிந்து தரைமட்டமாகி தொழிலாளர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். மூன்று பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையை ஏற்படுத்துகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. 

பட்டாசு ஆலைகளில் இதுபோன்ற வெடிவிபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. பட்டாசு ஆலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை காற்றில் பறக்கவிடுவதும், இதற்கு பொறுப்பாக உள்ள அரசுத்துறை கண்டுகொள்ளாமல் இருப்பதுமே இப்படிப்பட்ட இழப்புகளை தொடர்ந்து சந்திக்க வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பட்டாசு தொழிற்சாலைகளில் வெடி விபத்து ஏற்படா வண்ணம் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்திட வேண்டும். நடைபெற்ற வெடிவிபத்து குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்கிட வேண்டுமெனவும், படுகாயமுற்று உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு உயர் சிகிச்சை அளித்திடுவதோடு, உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. 

மேலும், தீபாவாளி மற்றும் பண்டிகை காலம் என்பதால் பட்டாசு தயாரிப்பு ஆலைகளில் அரசின் விதிமுறைகளை கறாராக அமல்படுத்து வதற்கும், வெடிவிபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதற்கும் தமிழக அரசு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அரசின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீதும், கடமையை செய்யத் தவறும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.