மக்களின் வாழ்வாதாரம், ஜி.எஸ்.டி நிலுவை, தமிழகத்தின் கடன் சுமை, முதலீட்டாளர் மாநாடு, டெல்டாவில் எண்ணெய் குழாய் பதிப்பு-என திமுக கோரிய எதையும் விவாதிக்காமல் நீட் தேர்வை தமிழகத்துக்குள் நுழைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் அட்டைக் கத்தி சுழற்றுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள் அறிக்கையில், '’“மருத்துவக் கல்விக் கனவினைத் தகர்க்கும் பலிபீடமாக இருக்கும் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால் மத்திய அரசும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசும் கல்நெஞ்சத்துடன் கண்டும் காணாமல் இருக்கின்றன.13 உயிர்களைக் காவு வாங்கிய நீட் தேர்வைத் தமிழகத்தில் ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மக்கள் பாதை இயக்கத்தினர் கடந்த 14ஆம் தேதி முதல் சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் கையெழுத்து இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி மக்கள் பாதை இயக்கத்தின் தலைமையகமான, சென்னை சின்மயா நகரில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெறும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எனது தார்மீக ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்டம் முடிகிறது... ஆறு மாதத்தில் விடிகிறது'’ என அவர் தெரிவித்துள்ளார்.