அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக பிரச்சனை வலுத்துவரும் நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
யார் அந்த ஒற்றை தலைமை ?
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டு அதிமுக -அமமுக என இருந்து வருகிறது. இதன் காரணமாக திமுக உள்ளிட்ட கட்சிகள் எளிதில் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை குழப்பத்தால் ஓபிஸ் அணி- இபிஎஸ் அணி இரண்டாக பிளவு படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இரண்டு தரப்பும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என அதிமுக மூத்த நிர்வாகிகள் கேட்டுக்கொண்டு வருகின்றனர். இருந்த போதும் இபிஎஸ் தரப்பு விடாப்பிடியாக இருப்பதாக கூறப்படுகிறது. சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியும், சென்னையில் ஓபிஎஸ்ம் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.நாளை தங்களது ஆதரவான மாவட்ட செயலாளர்களை இரண்டு தரப்பினரும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சென்னையில் கிரின்வேஸ் சாலையில் ஓபிஎஸ் தனது ஆதரவு நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு சந்தித்து பேசினார்.ஒற்றை தலைமை அஸ்திரத்தை எடுத்து கட்சி அதிகாரத்தை முழுமையாக கைப்பற்ற நினைப்பது எடப்பாடி பழனிசாமியின் திட்டத்தின் சூழ்ச்சியின் உச்சம் என விமர்சித்தார்.

"எடப்பாடி பழனிசாமி சூழ்ச்சி"
பல முறை ஓபிஎஸ் விட்டு கொடுத்ததாகவும் இந்த முறை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருப்பேன் என ஓ.பி.எஸ் தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், சுயநலம் கருதாமல் கட்சியின் நலம் கருதியவர் ஓ.பி.எஸ் எனவும், கட்சியையும் ஆட்சியையும் நம்பி ஒப்படைத்த சசிகலாவை அலட்சியப்படுத்தி அபகரித்து கொள்ள சதி செய்தது போல தற்போது சூழ்ச்சி செய்து அதிமுகவின் முழு அதிகாரத்தை கைப்பற்ற எடப்பாடி முயற்சி செய்வதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் ஆதரவுமில்லை, தொண்டர்கள் ஆதரவும் இல்லை என கூறிய தனியரசு, அதிமுகவில் ஒற்றை தலைமை வந்தாலும் ஓ.பி.எஸ் தான் தலைமை ஏற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார், ஓ.பி.எஸ். தலைமை ஏற்றால் சசிகலாவும் ஆதரவு தெரிவிப்பார் என கூறினார். அதிமுகவை வலிமைப்படுத்தும் விதமாக சசிகலா மற்றும் டிடிவியையும் சந்தித்து பேச உள்ளதாகவும் தனியரசு தெரிவித்தார்
