இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான முதல் தடுப்பூசி 2021 ஆம்  ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது என இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது. அதேபோல் தடுப்பூசியை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மிக வேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது. 

நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இது பற்றி கூறியதாவது:-  நாட்டில் தற்போது கொரோனா வைரஸ்க்கு எதிராக 3 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் இருந்து வருகிறது, குறிப்பாக இது மருத்துவ பரிசோதனைகளின் கட்டத்தை எட்டியுள்ளது. 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த தடுப்பூசி  நாட்டு மக்களுக்கு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் புதிய கொரோனா நோய்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்திற்குள் 82 ஆயிரத்து 170 ஆக பதிவாகியுள்ளது. 

அதேபோல் நாட்டில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 மில்லியனை தாண்டியுள்ளது, இதை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.  அதேபோல் கோவிட் தடுப்பூசிகளுக்கான ஆன்லைன் போர்ட்டலையும் அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதாவது தடுப்பூசி தொடர்பான அனைத்து ஆராய்ச்சி மற்றும் அதன் மேம்பாடுகள் குறித்த மேலதிகமான தகவல்களை அதில் தெரிந்து கொள்ள முடியும், அதேபோல் அதன் வெளியீட்டு தேதி மற்றும் பிற தகவல்கள் குறித்தும் போர்ட்டலில் கிடைக்கும். தடுப்பூசி பற்றிய தேவையான தகவல்களை பெற மக்கள் ஆன்லைன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தவிர பிற தடுப்பூசிகள் பற்றிய தகவல்களும் அதில் கிடைக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேபோல் ஐ.சி.எம்.ஆர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நூறாண்டு கால திட்டத்தையும் அவர் வெளியிட்டார். அப்போது பேசிய அவர்,  ஐ.சி.எம்.ஆருக்கு இது ஒரு வரலாற்று நாள் என்றும், 100 ஆண்டு கால திட்டத்தை வெளியிடுவது தனக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது என்றும் அவர் கூறினார். இந்த நிறுவனத்துடன் தொடர்புடைய  விஞ்ஞானிகளின் பணிகள் பற்றி இது தெரிவிக்கும் என்றும், மேலும் வரவிருக்கும் விஞ்ஞானிகளுக்கு இது ஒரு உத்வேகத்தை அளிக்கும் எனவும் அவர் கூறினார்.