பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்..?அடுத்த அதிர்ச்சி கொடுக்க தயாராகும் இபிஎஸ் அணி
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்குவது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக ஒருங்கிணைபாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஒப்புதல் பெறாத காரணத்தால் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லையென்று தெரிவிக்கப்பட்டது. தற்போது ஓ.பன்னீர் செல்வம் பொருளாளர் பதவி மட்டுமே உள்ளதாக கூறப்பட்டது. மேலும் எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பதவியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு அறிவிப்பு செல்லாது என்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தன்னிடம் ஒப்புதல் பெறவில்லையென ஓபிஎஸ் தரப்பினர் கூறினர்.
அதிமுக கூட்டம்- தீர்மானம் செல்லாது
இந்தநிலையில் நேற்று தேனி மாவட்டத்திற்கு சென்ற ஓபிஎஸ்க்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்ப்பு கொடுத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிரிலும் மேலான தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள், இன்றைக்கு உள்ள அசாதாரண சூழ்நிலை யாரால் எப்படி ஏற்பட்டது எவரால் இந்த சதிவலை பின்னப்பட்டதோ அவர்களுக்கு கூடிய விரைவில் மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள், அவர்கள் செய்த தவறுக்கு தொண்டர்கள் உறுதியான தண்டனையை வழங்குவார்கள் என கூறினார். ஓபிஎஸ் தேனி மாவட்டத்திற்கு சென்ற நிலையில், நேற்று இரவு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் பெயர் இல்லாமல் அதிமுக தலைமை கழகம் என்ற பெயரில் இன்று காலை அதிமுக தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிக்கை வெளியானது. இந்த அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்த ஓபிஎஸ் தனது ஒப்புதல் இல்லாமல் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகவும், எனவே இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படவுள்ள முடிவுகள் தன்னை கட்டுப்படுத்தாது என தெரிவித்திருந்தார்.
பொருளாளர் பதவியில் இருந்து நீக்கம்
இதனையடுத்து இன்று காலை எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகளான, தம்பிதுரை, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் 75 அதிமுக நிர்வாகிகளுடன் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ்க்கு தற்போது உள்ள பொறுப்பான பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாகவும்,அவரது ஆதரவாளர்களாக உள்ள வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோரது பதவிகள் பறிப்பது தொடர்பாக இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நமது அம்மா நாளிதழ் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில், தற்போது அதிமுகவில் இருந்து முழுவதுமாக ஓரம்கட்ட இபிஎஸ் தரப்பு முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்