பிரதமர் மோடி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நண்பர் என பரவலாக அறியப்பட்டவர். அவர் குஜராத் முதலமைச்சராக இருந்த நேரத்தில், போயஸ் கார்டன் வீட்டிற்கே, வந்து விருந்து சாப்பிட்டுச் சென்றார். மூன்றாவது முறையாக அவர் குஜராத் முதலமைச்சராக பதவியேற்றபோது, ஜெயலலிதா நேரில் சென்று அந்தப் பதவியேற்பில் கலந்து கொண்டார்.

ஆனால், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, அவரை நலம் விசாரிக்க பிரதமர் மோடி கடைசிவரை வரவில்லை. ஜெயலலிதா இறந்த பிறகு, அஞ்சலி செலுத்துவதற்கு மட்டும் ராஜாஜி ஹாலுக்கு நேரில் வந்தார். ஆனால், கலைஞர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தபோது, கோபாலபுரம் வீட்டிற்கே வந்து பார்த்தார். டெல்லியில் தன் வீட்டில் வந்து தங்கி ஓய்வு எடுக்குமாறு கலைஞரிடம் கோரிக்கை ஒன்றைக்கூட முன் வைத்தார். அதுபோல, கருணாநிதி இறந்தபிறகு, ராஜாஜி ஹாலுக்கு நேரில் வந்து, கலைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார் பிரதமர் மோடி.

நாடாளுமன்றத்தில் எந்தப் பொறுப்பும் வகிக்காத கலைஞருக்காக, பி.ஜே.பி மற்றும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளையும் நாள் முழுதும் ஒத்திவைத்தது. நாடாளுமன்றத்தில் எந்தப் பொறுப்பும் வகிக்காத ஒருவருக்காக, இரண்டு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது, அதுவே முதல்முறை. இப்படி பல வகைகளிலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க அஸ்திரங்களை ஏவியது பாஜக. ஆனால், திமுக கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை.

அடுத்து தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலிலாவது திமுகவுடன் கைகோர்க்கத் துடிக்கிறது பாஜக. ஆனால் அதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. வழக்கம்போல பாஜக எதிர்ப்பு பிரச்சாரத்தையே முன்னெடுத்து வருகிறது திமுக. இந்நிலையில்தான் நட்புக்கு கைகொடுக்காத உதயசூரியனை ஒரு வழி செய்யவேண்டும் என்கிற திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது பாஜக தலைமை.

பா.ஜ., அகில இந்திய தலைமை, கர்நாடகாவில் ஆப்பரேஷன் ’குமாரா’வை ஆரம்பித்து குமாரசாமி அரசை கவிழ்த்து, எடியூரப்பா ஆட்சியை கொண்டு வந்தது. ஆந்திராவில், ஆப்பரேஷன் ’கருடா’வை துவங்கி சந்திரபாபுவை அடியோடு ஒழித்து விட்டு, தங்களுக்கு ஆதரவான, ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை கொண்டு வந்தது. தமிழகத்திலும், ஆப்பரேஷன் ’திராவிடா’வை ஆரம்பித்து வி.பி.துரைசாமி போன்ற திமுக பிரமுகர்களை இழுத்து வருகிறார்கள்.  

இதே போல மஹாராஷ்டிராவில் ஆப்பரேஷன் ’கமலா’வை ஆரம்பித்து இருக்கிறார்கள். அங்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவார் தான், 'கிங் மேக்கராக' இருக்கிறார். அவரது மகள் சுப்ரியாவுக்கு, முதல்வர் பதவி என்கிற நிபந்தனையோடு, திரைமறைவு பேச்சை ஆரம்பித்து இருக்கிறார்கள். நாடு முழுக்க, எதிரிகளே இருக்கக் கூடாது என முடிவு செய்து  பாஜக வேலைகளை ஆரம்பித்து விட்டது.