ஜாபர் சாதிக்கிற்கும் தமிழக பாஜக துணை தலைவருக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன.? கேள்வி எழுப்பும் திமுக
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கிற்காக நீதிமன்றத்தில் வாதாடி விடுதலை பெற்றுக்கொடுத்த பாஜக துணை தலைவர் பால் கனகராஜிற்கு என்ன தொடர்பு என திமுக கேள்வி எழுப்பியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்- ஜாபர் சாதிக் கைது
திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளராக இருந்த ஜாபர்சாதிக் 3ஆண்டுகளாக 3500கிலோ போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களை வெளிநாட்டிற்கு கடத்தியதாக கடந்த ஒரு சில வாரங்களாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் தேடப்பட்டு வந்தார். அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் திடீரென மாயமானார். இதனை தொடர்ந்து நேற்று பொதைப்பொருள் தடுப்பி பிரிவினரால் டெல்லியில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாபர் சாதிக் திமுக தலைவர்களுக்கு நிதி அளித்ததாக புகார் எழுந்தது. மேலும் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தின் மூலம் திரைப்படம் தயாரித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து திமுகவை பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
திமுகவுடன் தொடர்பு - பாஜக குற்றச்சாட்டு
போதைப்பொருள் கடத்தல் தலைவன் ஜாபர் சாதிக்கிற்கு கட்சியில் அங்கீகாரம் அளித்து திமுக தலைவரும் முதலமைச்சரும் உடந்தையாக இருப்பதாகவும் குற்றம்சாட்டிவந்தனர். இந்தநிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக ஒரு புதிய குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் வெளியிட்டு பதிவில்,
சர்வதேச போதைக் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கிற்காக நீதிமன்றத்தில் வாதாடி விடுதலை வாங்கிக்கொடுத்தது பாஜகவின் வழக்கறிஞர் பால் கனகராஜ் அவர்கள். எனவே பாஜகவிற்கும் ஜாபர் சாதிக்கிற்கும் என்ன சம்மந்தம் என யார் விளக்குவார்கள்?? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் பதிவு செய்துள்ள நீதிமன்ற தீர்ப்பு விவரத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜாபர் சாதிக் உள்ளிட்ட ஐந்து பேர் போதை பொருட்கள் மற்றும் மனநிலை பாதிக்கும் பொருட்களை எபிட்ரின் என்கிற போதை மருந்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக நிர்வாகிக்கு தொடர்பு என்ன.?
அதில் ஜாபர் சாதிக்கை இந்த குற்றத்தில் இருந்து விடுவிக்க அவருக்கு ஆதரவாக வழக்கறிஞரும், தற்போது பாஜக துணை தலைவராக இருக்கும் பால் கனகராஜ் ஆஜராகி வாதிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டியில் இருந்தும் ஜாபர் சாதிக்கிற்கு விடுதலை பெற்றுக்கொடுத்தாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்