பிடிஆர் வாகனம் மீது செருப்பு வீச்சு ஆடியோ..! இது அண்ணாமலை குரல் தான், ஆனால் ...! பகீர் கிளப்பும் பாஜக நிர்வாகி
தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் வாகனம் மீது செருப்பு வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதை வச்சு அரசியல் பன்னலாம் என அண்ணாமலை பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிடிஆர் வாகனம் மீது செருப்பு வீச்சு
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் மதுரையை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவவீரர் உயிர் இழந்தார். அவருடைய உடல் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அமைச்சர் பிடிஆர் அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது பாஜகவினருக்கும், அமைச்சருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சரின் வாகனம் மீது பாஜகவினர் செருப்பை வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பாஜகவை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து பாஜக மதுரை மாநகர் தலைவராக இருந்த டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இந்தநிலையில் அமைச்சர் வாகனம் மீது செருப்பு வீச்சு சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், தற்போதைய மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரனும் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், விமான நிலையத்தில் எதாவது சம்பவம் நடைபெறுகிறதா? உங்க ஏரியாவில் எத்தனை பேர் உள்ளனர் என அண்ணாமலை குரலில் கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு 1000 பேர் இருப்பார்கள் என கூறுகிறார், அனைவரையும் வர சொல்லுங்கள் என கூறப்படுகிறது.
மறுப்பு தெரிவித்த பாஜக மாவட்ட தலைவர்
விமானநிலையத்தில் இருந்து திருமங்கலம் வழியாக ராணுவ வீரரின் கிராமத்திற்கு செல்ல வேண்டும் என கூறுகிறார். அண்ணா இருங்க இதை வேறு மாதிரி பன்னுவோம், ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை மாஸாக செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இதை எப்படி அரசியல் பன்னனும்னு யோசித்து கொண்டுள்ளேன், இதை அரசியல் பன்னிவிடுவோம் என பேசப்படுகிறது. இந்த ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த ஆடியோ தனது குரல் இல்லையென பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது திமுகவின் தில்லு முல்லு என கூறியுள்ளார், இது அண்ணாமலை குரல் தான், அண்ணாமலை இரண்டு மூன்று இடங்களில் பேசியதை சேர்த்து பதிவு செய்யப்பட்டுள்ளது. மீட்டிங்கில் பேசியது, காரில் பேசியது என அனைத்தையும் சேர்த்து எடிட்டிங் செய்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அண்ணாமலை என்னிடம் போனில் பேசவில்லை, நானும் அவருடன் போனில் பேசவில்லை, என்னிடம் சிம் ஒன்றுதான் அதனை சோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள். நான் அண்ணாமலையோடு பேசியதாக ஒரு ரெக்கார்டு இருந்தால் சொல்லுங்கள் என சவால் விடுத்தார். அண்ணாமலை மற்ற நிர்வாகிகளுடன் இது போன்று பேச வாய்ப்பு இல்லையெனவும் சுசீந்திரன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
இறுதி கட்டத்தை நெருங்கும் கொடநாடு கொலை வழக்கு..! உதகை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை...!