திண்டுக்கல் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற தாய்-மகள் உள்ளிட்ட மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள காவேரி செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி ராதா (வயது 38) இவரது மகள் பவ்யா ( வயது 12 )இருவரும் இன்று மேட்டுக்கடை அருகே உள்ள ஒரு குளத்தில் குளிப்பதற்காக சென்றனர். 

அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் தண்டபாணி என்பவரின் மகள் சரஸ்வதி (வயது13) என்ற குழந்தையையும் உடன் அழைத்து சென்றுள்ளனர். குளத்தில் 3 பேரும் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆழம் தெரியாமல் மூவரும் தண்ணீரில் மூழ்கினர். கண்ணெதிரில் குழந்தை மூழ்குவதை கண்டதாய் அலறினார். ஆனால் அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் இரு சிறுவர்களுடன், ராதாவும் நீரில் மூழ்கினார். ஆனால் தூரத்தில் இருந்து இதை பார்த்த சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து மூன்று பேரின் உடலையும் மீட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே ஊரைச் சேர்ந்த 3 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.