சசிகலாவின் அபராதத் தொகையை ஏற்றுக்கொண்டதாக கர்நாடக உச்சநீதிமன்றம் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவல் சசிகலா தரப்பை மகிழ்ச்சியடையச் செய்திருக்கின்றது.

சசிகலாவின் தண்டனை காலம் நிறைவடைந்ததையடுத்து சிறை விதிகளின் படி, கடந்த ஆகஸ்ட் மாதமே அவர் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சசிகலா விடுதலை தொடர்பாக சிறைத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. அதாவது சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10.10 கோடி அபராதத்தை செலுத்தினால், சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் முத்துக்குமார், நீதிமன்றம் விதித்த 10.10 கோடி ரூபாயை நேற்று மாலை நீதிமன்றத்தில் செலுத்தினார். சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியன் பெங்களூரிலேயே கடந்த சில நாள்களாக முகாமிட்டு, சசிகலாவின் விடுதலையை உறுதி செய்வதற்கான வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

இந்த சூழலில் இன்று மாலை சசிகலாவின் அபராதத் தொகையை ஏற்றுக்கொண்டதாக 34 வது நகர சிவில் நீதிமன்றம் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.