Asianet News TamilAsianet News Tamil

ஏராளமான தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்படும் “காஷ்மீர் பிரச்சனை” என்றால் என்ன??

இந்தியா சுதந்திரம் பெற்ற போது, இங்கு 500 குறுநில அரசுகள் இருந்தன. இந்த குறுநில அரசுகளுக்கு மூன்று வகையான வாய்ப்புகள் வழங்கப்பட்டன: 1. இந்தியாவுடன் இணைவது 2. பாகிஸ்தானுடன் இணைவது 3. தற்சார்புடன் இருப்பது. அந்த அரசுகளின் பரப்பளவு மற்றும் அந்தந்த மக்களின் விருப்பம் சார்ந்து முடிவுகள் எடுக்க, சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன. ஏறக்குறைய அனைத்து அரசுகளும் தங்கள் முடிவுகளை விரைவாக எடுத்துவிட்ட போதும், ஹைதிராபாத் மன்னரும், ஜுனாகர் -காஷ்மீர் மன்னர்களும் தயக்கம் தெரிவித்தனர். ஹைத்திராபாத் மற்றும் ஜுனாகர் அரசுகள் இந்தியாவின் ராணுவ நடவடிக்கையின் மூலம் இணைக்கப்பட்டன.

the complete story of kashmir issues
Author
Kashmir, First Published Aug 5, 2019, 10:36 AM IST

இந்தியா சுதந்திரம் பெற்ற போது, இங்கு 500 குறுநில அரசுகள் இருந்தன. இந்த குறுநில அரசுகளுக்கு மூன்று வகையான வாய்ப்புகள் வழங்கப்பட்டன: 1. இந்தியாவுடன் இணைவது 2. பாகிஸ்தானுடன் இணைவது 3. தற்சார்புடன் இருப்பது. அந்த அரசுகளின் பரப்பளவு மற்றும் அந்தந்த மக்களின் விருப்பம் சார்ந்து முடிவுகள் எடுக்க, சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன. ஏறக்குறைய அனைத்து அரசுகளும் தங்கள் முடிவுகளை விரைவாக எடுத்துவிட்ட போதும், ஹைதிராபாத் மன்னரும், ஜுனாகர் -காஷ்மீர் மன்னர்களும் தயக்கம் தெரிவித்தனர். ஹைத்திராபாத் மற்றும் ஜுனாகர் அரசுகள் இந்தியாவின் ராணுவ நடவடிக்கையின் மூலம் இணைக்கப்பட்டன.the complete story of kashmir issues

ஜம்மு -காஷ்மீர், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக (80 சதவிகிதம்) வசிக்கும் மாநிலமாகும் எனவே, காஷ்மீரின் மன்னர் ஹரிசிங் தற்சார்புடன் இருக்கவே முடிவு செய்தார். அவர் காஷ்மீரை ஆசியாவின் சுவிட்சர்லாந்தாக மாற்ற வேண்டும் என்கிற கனவுடன் இருந்தார். அவர், பாகிஸ்தான்-இந்தியா ஆகிய இரு தேசங்களையும் பொறுத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார் (நடவடிக்கைகளை நிலுவையில் வைக்கும்படி). அதனை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்ட போதும், இந்தியா மறுத்தது. காஷ்மீர் பிரச்சனை குறித்த எந்தத் தீர்வையும் எட்டுவதற்கு முன்னரே, பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமித்தது.

பழங்குடியினரின் போர்வையில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீருக்குள் நுழைந்தது. இந்த நிகழ்வுக்குப் பின்னர் நடைபெற்ற சம்பவங்களில், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லா முக்கியப் பங்காற்றினார். காஷ்மீர் மன்னர் தன் தூதுவர்கள் மூலம் ராணுவத்தை அனுப்பி, தன்னுடைய தேசத்தை மீட்டுத்தரும்படி இந்தியாவிடம் கேட்டுக் கொண்டார். இந்திய ராணுவம் வந்து தலையிடுவதை ஷேக் அப்துல்லா உறுதிப்படுத்தினார்.the complete story of kashmir issues

‘காஷ்மீருடன் ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாத நிலையில், அங்கு ராணுவத்தை அனுப்ப இயலாது' என நேரு அறிவித்தார். காஷ்மீருடன் எந்த சட்டத் தொடர்பும் அப்போது இந்தியாவுக்கு இல்லை. அந்த மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் சட்டப்பிரிவு 370 இன் கீழ் இணைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த இணக்க ஒப்பந்தத்தின் படி, இரண்டு தலைவர்கள் -இரண்டு அரசியல் அமைப்புகள். அதன்படி காஷ்மீரின் ராணுவம், பாதுகாப்பு, வெளியுறவு, தொலைத்தொடர்பு, நாணயம் ஆகியவற்றை இந்தியா பார்த்துக் கொள்ளும். மாநில சட்டமன்றம் மற்ற பிரச்சனைகளைப் பார்த்துக் கொள்ளும். இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் காஷ்மீருக்குப் பொருந்தாது. ஏனெனில், காஷ்மீருக்கு சொந்தமான அரசியல் அமைப்புச் சட்டம் இருந்தது. இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில்தான் இந்தியா ராணுவத்தை அனுப்பியது.

ஆனால் இந்த நேரத்தில், காஷ்மீரின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. பொதுமக்களுக்கு சங்கடங்கள் உயிர் சேதங்கள் ஏற்படாதவாறு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த பிரச்சனை அய்க்கிய நாடுகள் அவைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அய்.நா.வின் தீர்மானத்தின்படி, இரு நாட்டு ராணுவங்களும் வெளியேற்றப்பட்டு, அதன் பிறகு அங்குள்ள பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால் கருத்துக்கணிப்பை இன்றுவரை நடத்த முடியவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை ‘சுதந்திர காஷ்மீர்' என அறிவித்தது. அந்தப் பகுதிக்கு பிரதமரையும் அமைப்பு விதிகளையும் அறிவித்தது.the complete story of kashmir issues

ஜன சங்கம் மற்றும் பல தேசிய சக்திகள் காஷ்மீரின் தனித்தன்மையை மட்டுப்படுத்தி, இந்தியாவுடன் இணைந்திடுமாறு இந்திய அரசை வற்புறுத்தின. ஆனால், பிரதமர் ஷேக் அப்துல்லா இந்தியா கொடுத்த அழுத்தங்களுக்குப் பணிய மறுத்தார். எனவே அரசெதிர்ப்பு செயல் -தேசத் துரோகம் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டு, 17 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் காலத்தில் தான் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. ‘காஷ்மீர் பிரதமர்' என்கிற பதவி ‘காஷ்மீர் முதல் அமைச்சர்' என்றும், ‘சர்தார் -இ -ரியாசத்' என்கிற பதவி ‘ஆளுநர்' பதவியாகவும் மாற்றம் பெற்றது. மெல்ல இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் காஷ்மீரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. காஷ்மீரின் விவகாரங்களை மத்திய அரசு கண்காணிக்கத் தொடங்கியது. அங்கு இருந்த ஜனநாயகம் சார்ந்த நடவடிக்கைகள் மெல்ல வலுவிழக்கத் தொடங்கின.the complete story of kashmir issues

இன்றுவரை மத்திய அரசு மற்றும் அங்குள்ள மாநில ஆட்சியாளர்கள் உள்ளூர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களாக இல்லை. 1984 இல் பரூக் அப்துல்லா பதவி நீக்கம் செய்யப்பட்டார். 1987 தேர்தல்கள் நியாயமாக நடைபெறவில்லை. இவை அனைத்தும் காஷ்மீர் வாழ் மக்களிடையே பெரும் வெறுப்புணர்வை ஏற்படுத்தியது. இளைஞர்கள் மெல்ல வன்முறையின் பால் ஈர்க்கப்பட்டனர். இது, காஷ்மீர் மக்களைப் பெரிதும் அந்நியப்படுத்தியது. ஜனநாயக நடைமுறைகள் செயலிழக்க, ஜனநாயக நடைமுறைகளுக்குப் பல தடைகள் ஏற்பட்ட பின்னணியில் தான் அங்கு தீவிரவாதம் தலைதூக்கியது.

அங்கு நிலவிய அதிருப்தியான மனநிலை, தீவிரவாதத்திற்கு ஆதரவாக திசைமாறியது. பாகிஸ்தான் இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. பாகிஸ்தான் தனது தீவிரவாதப் படைகளை காஷ்மீருக்கு அனுப்பி நிலவரத்தை மேலும் சிக்கலாக்கியது. மீண்டும் பரூக் அப்துல்லா ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கூட, மத்திய அரசு மதிக்கவில்லை என்பதை இது தெளிவுபடுத்தியது. இந்த நிலைக்கு மற்றொரு காரணம், காஷ்மீரில் அல் கொய்தாவின் நுழைவு. ரஷ்யாவிற்கு எதிராக கிளர்ச்சிகள் செய்ய அமெரிக்கா அனுப்பிய அல்கொய்தா படைகளின் ஒரு பகுதி, அங்கு பணியை முடித்துவிட்டு காஷ்மீருக்குள் நுழைந்தது.

1980களில் இந்தியாவில் நிலவிய மதவாத சூழல், காஷ்மீரில் மேலும் வன்முறை வளர காரணமாக அமைந்தது. காஷ்மீர் பண்டிதர்கள் மற்றும் காஷ்மீரில் வாழும் முஸ்லிம்கள் இடையே நிலவிய சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து அங்கும் மதவாத சக்திகள் தங்கள் பணியைத் தொடங்கின. இது, மேலும் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக அமைந்தது. சில பயங்கரவாதிகள் இந்துக்கள் மீது தாக்குதல் தொடுத்து அவர்களிடையே அச்சத்தை விதைத்தனர்.

காஷ்மீரின் ஆளுநர் ஜக்மோகன், ‘காஷ்மீரில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாதிகளே' என்கிற அடிப்படையில் செயல்பட்டார். பண்டிதர்கள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறினால் தான் தீவிரவாதிகளை ஒடுக்க இயலும் என அவர் கூறினார். அதன்படி பண்டிதர்கள் காஷ்மீரை விட்டு வெளியேற பல்வேறு போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். முஸ்லிம்களும் தலைவர்களும், இதனை தடுத்திட முழுவதுமாக முயன்றனர். ஆனால் ஆளுநர் ஜக்மோகனின் தூண்டுதலால் பண்டிதர்கள் அங்கிருந்து வெளியேறி, அகதிகள் முகாம்களில் குடியமர்த்தப்பட்டனர்.the complete story of kashmir issues

அங்கு நிகழ்ந்த தீவிரவாத வன்முறையில் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, பல முஸ்லிம் குடும்பங்களும் காஷ்மீரை விட்டு வெளியேறினர். இரு நாடுகளிடையே நிலவிய பிரச்சனை தான் காஷ்மீர் நிலவரத்துக்கு மதவாத சாயத்தைப் பூசியது. காஷ்மீரின் தலைவர்களுக்கு பாகிஸ்தானுடன் இணைந்திடும் சூழல் ஏற்பட்ட பொழுதும் கூட, அவர்கள் அவ்வாறு முடிவெடுக்கவில்லை. பல்வேறு கருத்துக் கணிப்புகளின் படி, இன்றும் கூட காஷ்மீர் முஸ்லிம்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பவில்லை. இந்திய ஆட்சியாளர்களின் கொள்கைகளால் ஏற்படும் தொடர்ச்சியான அந்நியமாதல், இனக்குழுக்களின் விருப்பங்கள் நிராகரிக்கப்படுதல், தொடர்ந்து காஷ்மீர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் கவிழ்ப்பு எனப் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற பிறகும்-காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பவில்லை.

இன்றும் காஷ்மீர் மக்களின் முக்கியக் கோரிக்கை : இணைப்பு ஒப்பந்தப்படி காஷ்மீரின் தற்சார்பைப் பேணுவது. காஷ்மீரின் பூர்வ இன தன்மையைப் பாதுகாப்பது, வன்முறைகள் நிறுத்தப்பட்டு அமைதியுடன் கூடிய வாழ்வைப் பெறுவது. பாகிஸ்தான் அரசு தனது தலையீட்டை நிறுத்துவது மற்றும் இந்திய அரசு காஷ்மீரிகளை நம்புவது. 2000 இல் "அவுட் லுக்' நடத்திய கருத்துக்கணிப்பின் படி, 74 சதவிகித மக்கள் தங்களின் காஷ்மீரி அடையாளத்துடனேயே வாழ விரும்புகின்றனர்; 16 சதவிகித மக்கள் காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய தற்சார்பு வேண்டும் என்றனர்; 2 சதவிகிதத்தினர் பாகிஸ்தானுடன் இணைய விரும்புகின்றனர். 39 சதவிகிதத்தினர் இந்திய அரசியல் அமைப்புக்கு உட்பட்டுத் தீர்வு காணவே விரும்பினர்.

1987இல் நடைபெற்ற முறைகேடான தேர்தலுக்குப் பிறகுதான் 1990இல் பயங்கரவாத நடவடிக்கைகள் நிலைப்படுத்தப்பட்டன. அங்கு நடைபெற்ற கலவரங்களில் இறந்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களை நாம் பார்க்க வேண்டும்.

காஷ்மீரிலிருந்து பண்டிதர்கள் மொத்தமாக வெளியேறியது, பள்ளத்தாக்கின் மரபுக்கு நேர்ந்த பெரும் தலைக்குனிவு. புள்ளிவிவரங்களின் படி, அங்கு நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களால் இந்துக்கள் மட்டுமே பாதிக்கப்படுவதாக கருதப்படும் கூற்றுகள் பொய்யாகின்றன. 1986இல் தான் பண்டிதர்கள் முதலில் வெளியேறத் தீர்மானித்தனர். ஆனால் நல்லிணக்கக் குழுவின் தலையீட்டால் அது நிறுத்தப்பட்டது. 1990களில் ராணுவம் காஷ்மீரில் குவிக்கப்பட்டது. ஆளுநராகப் பதவியேற்ற ஜக்மோகன் மெல்ல தனது செயல் திட்டத்தை தொடங்கினார். நல்லிணக்கக் குழுவை அவர் செயலிழக்கச் செய்துவிட்டு, அந்த குழுவிலிருந்து ஒருவரை ஜம்முவுக்கு குடிபெயரச் செய்தார் (பூரி, காஷ்மீர், ஓரியண்ட் லாங்மேன், 1974, பக்கம் 65).

பால்ராஜ் பூரி, 1990 மார்ச்சில் இவ்வாறு கூறுகிறார் : “காஷ்மீரில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் பண்டிதர்கள் இடையில் எந்தப் பகைமை உணர்வையும் நான் காணவில்லை. ஆனால், அங்குள்ள பாதுகாப்புப் படைகளின் மனித உரிமை மீறல்கள் தான் இன்று விசாரிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம்'' (பூரி, பக்.66). “அந்த நேரத்தில் பண்டிதர்கள் இடையே வன்முறையையும் அச்ச உணர்வையும் இந்து மதவாத இயக்கங்கள் ஏற்படுத்தின. காஷ்மீரைப் பற்றி ஏராளமான தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. அங்கு ஏராளமான இந்து கோயில்கள் தகர்க்கப்படுவதாக தகவல்கள் மக்கள் மனங்களில் விதைக்கப்படுகின்றன. இதில் ஒரு பகுதி மட்டும் தான் உண்மை'' (‘பிரஸ் கவுன்சில்', 1991).

ராம் புனியானி 
தமிழில்: அ.முத்துக்கிருஷ்ணன் 

Follow Us:
Download App:
  • android
  • ios